என் அன்பு SLM
---------------------------------------------------------------------------------------------------
சிலந்தி அவ்வளவு மெல்லிய நூல் இழைகளால் தனக்கென ஒரு வலையைப் பின்னும். மறைப்புகள் இல்லாத கடினமில்லாத கண்ணாடி நூல் இழைகளால். அது தன்னளவில் மிக வலிமையான அழகான வலையாகவும் இருக்கும்.
SLM அவர்களின் ஆழ்ந்த அன்புவலை என்னைச்சுற்றிய கண்ணாடி இழைகளால் ஆனது. அவ்விழைகளால் எனது குடும்பமே பின்னப்பட்டிருக்கிறது.
என்னுடைய வாழ்நாளில் மனநிறைவைத்தந்த அரிய தோழமைகளில் SLM அவர்களின் அன்பிற்கும் நட்பிற்கும் தனியொரு இடமும் மரியாதையும் உள்ளது.
வாழ்வின் பண்புகளைப் புரிந்து கொள்வதன் வழியாக SLM மையும், SLM மைப் புரிந்துகொள்வதன் வழியாக வாழ்வின் பண்பாடுகளையும் புரிந்துகொண்டவள் நான்.
எனக்கு முன்பும் பின்னும் ஒரு பிசாசென தன் இரு தலைகளையும் விரித்து வாய்பிளந்து நிற்கிறது காலம். எனக்கு முன்னாலுள்ள பிசாசின் வாய்க்குள் விழுந்துவிட்டால், எனக்குத்தெரியும் அதன்பிறகு என்னுடைய கவிதைகள், கனவுகள், என்னுடைய மனிதர்கள், நட்பு, காதல் எதுவும் எஞ்சப்போவதில்லை. அதன்பிறகு நான் என்று எதுவுமில்லை. அந்தப்பிசாசின் தலை என்பக்கம் எப்போது திரும்புமோ நானறியேன். ஆனால் இப்பாதையில் ஓட்டமும் நடையுமாக என்னைக்கடந்துபோகும் ஓராயிரம் பேர்களை காண்கின்றேன். மிகச்சிலரை என் பாதையில் தடுத்து நிறுத்திக்கொள்கிறேன். பிறகெப்போதும் அவர்களை மறக்க விரும்பாதவளாக மாறிவிடுகின்றேன்.
வாழ்வு எவ்வளவு சவாலானது ! எத்தனை எளிமையானது ! புதிதாயும் அதிசயம் மிகுந்தும் இருப்பது ? இவற்றைக் காண்பதற்கும் உணர்வதற்கும் இதயத்தில் ஐந்தாவதாக மேலதிக அறையொன்று தேவைப்படுகின்றது.
கலையுணர்ச்சி அன்பின் வலிமைதான் என்று நம்புகின்றவள் நான். அன்பு என்கின்ற அந்தப் பழைய பண்டம் இன்று யாருக்குத்தான் தேவை ?. அன்பே இயல்பாக, பழக்கமாக, நாகரீகமாக, உளவளமாக கொடுக்கவும் பெறவும் வேண்டிய கொடையாக நான் அறிந்து வைத்திருக்கிறேன்.
SLM !
நானும் நீங்களும் அண்மையில் உள்ள ஊர்களிலேயே வசிக்கின்றோம். ஆனால் உங்களை எனக்கு அறிமுகப்படுத்த ஆறேழு வருடங்களுக்குமுன் கனடாவிலிருந்து சேரன் வரவேண்டியிருந்தது.
சேரனின் செல்போனிலிருந்துதான் முதல்முறையாக ஒரு இரவு என்னுடன் பேசினீர்கள். எனக்கு ஞாகமிருக்கிறது...
“உன்னுடைய கவிதைகளை ரசிப்பதற்கு வேறொரு மனமும் அறிவும் வேணும்பிள்ள” என நீங்கள் கூறியது.
என் அன்பு SLM ! இந்த வார்த்தைகளை இன்னும் நான் நம்புகின்றேன். பல சந்திப்புகளும் பயணங்களும் SLM என்ற கதைசொல்லியுடன் கழிந்திருக்கிறன. அவ்விதமான ஓர் இரவில் அஸீமும், நானும் நீங்களும் வீட்டுவாசலில் நிலவை நிறுத்தி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். ஊரே நிசப்தமான அன்று இரவு நீங்கள் சில பாடல்களைப் பாடிய படி பேசிக் கொண்டிருந்தீர்கள். அந்தப் பழைய பாடல்களை உண்மையில் மிக அருமையாகப் பாடினீர்கள். எனது விருப்பமாக ஸ்ரீனிவாசின் பாடல்களைப் பாடினீர்கள். ஆனால் அன்று தேர்ந்த பாடகனாய் மாறி “எசமான் பெத்த செல்வமே என் சின்ன எசமானே“ பாட்டை நீங்கள் பாடியபோது நிலவை மேகங்கள் மூடி சாம்பல் ஒளியுடன் மேகத்திடல்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன. பூங்காரமான நிலா வெளிச்சத்தில் அந்தப்பாடல் கண்ணீரென மிதந்தது.
பனியும் ஒளியும் சொட்டிய மாவிலைகளின் கீழ் இன்றும் சில இரவுகளில் உங்கள் பாடல்கள் கேட்கின்றன.
உங்களைப்பற்றிய நினைவுகள்..... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம். ஊர்ப்பெண்களிடமும், ஆண்களிடமும், இளைஞர்களிடமும் இருப்பவை எண்ணிடலங்காதவை. எப்போதும் ரசிகர்களும், நண்பர்களும் தேன் கூட்டைச் சுற்றிய தேனீக்களைப்போல, உங்களைச்சுற்றியவாறு வருகின்றனர். சிரிப்பொலியும் லயித்துக்கிடக்கும் உங்கள் பேச்சும் பாரபட்சமின்றி இம்மண்ணில தொடர்கின்றது.
மக்கத்துச்சால்வை ஹனீபா என்னும் புகழ்பெற்ற பெயரோ
சிறுகதை எழுத்தாளர்
சமூக அரசியல் விமர்சகர் என்ற முகமோ
ஆற்றல் மிகுந்த மேடைப்பேச்சாளர்
அற்புதமான கதைசொல்லி என்கின்ற படிமங்களோ அல்ல என் கண்களுக்குள் தோன்றுவது.
விடிந்தும் விடியாத ஓர் அதிகாலையில் தேனும், பழங்களும் நிறைந்த உவப்பும் ருசியுமான உணவுவகைகளின் வாசனைகளோடு இரண்டு கைகளிலும் இரு பைகளுடன் என் வாசலில் கேட்கின்ற மிடுக்கான குரல். எனது மகன் உம்மாப்பா என அழைத்தபடி ஓடிவரும் ஆதரவும் பாசமும் அக்கறையும் நிறைந்த உருவம்,
SLM என்று நான் அழைக்கும் கனிவான உருவம்தான்.
சந்தேகமில்லாமல் அது என் அன்புத் தந்தையின் உருவம்தான்.
- அனார்
- அனார்
No comments:
Post a Comment