மழை நாள்
------------------------------------------------------------------------------------------------------------
மிகுந்த வரட்சியான என்னுடைய ஊரின் இந்தநாட்களில் மழைநாள் வருமென எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் வீட்டுத் தென்னை, மா, பலா, நெல்லி, மாதுளை மரங்களும்கூட மழை வரவேண்டுமென்றுதான் வேண்டிக் கொண்டு நின்றன. எப்போதும் எதிர்பார்க்கும் வேளைகளில் மழை வருவதில்லை.
உள்ளே பெய்கின்ற மழை
வெளியே தெரிவதில்லை
வெளியே பெய்கின்ற மழைஉள்ளே
நனைப்பதில்லை
அதனாலென்ன ?
என் பேரன்பிற்கும் பெரும் மரியாதைக்குமுரிய பேராசிரியர் – கவிஞர். எம்.ஏ. நுஃமான் சேர் அவர்கள், அவரது அன்புத் துணைவியாருடன் முதன் முறையாக என் வீட்டுக்கு வந்தபோது மிகப்புதிய மழைத்தூவலில் என் உயிர் குளிர்ந்தது.
கடந்த ஐந்தாறு வருடங்களாக நுஃமான் சேர் அவர்களின் நட்புறவும் தோழமையும் என்னைத் தொடர்ந்து வருகிறது. அந்த அன்பின் ஈரம் விடாது பெய்யும் மழையென என் ஞாபகங்களில் நிலைத்திருக்கும்.
- அனார்
No comments:
Post a Comment