எழுத்தாளர் அ. யேசுராசா
-----------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய வாழ்நாளில் நான் சந்திக்கவிரும்பிய மிகச் சில ஆளுமைகள் இன்று இவ்வுலகில் இல்லை. இந்த இழப்பினால் எனக்குள் நேர்கின்ற வெற்றிடம் அளப்பெரியது.
சிலரைச் சந்தித்த பிறகு ஏன் சந்தித்தோம் என்று இருக்கும்... இன்னும் சிலரை மீண்டும் பலமுறை சந்திக்க மனம் விரும்பும்... அவ்விதம் திரும்பவும் நான் சந்திக்கவிரும்பும் ஒரு ஆளுமையை அண்மையில் சந்தித்தேன். திரு. அ. யேசுராசா அவர்களை சந்திக்கக் கிடைத்ததையிட்டு மிகுந்த பெருமிதமும் உவகையும் எனக்குள் ஏற்பட்டது. அவருடன் உரையாடக்கிடைத்த பகல்ப்பொழுது தன்னிகரற்றது.
அவருடைய “பதிவுகள்” நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய கட்டுரையிலிருந்து சில பகுதி...
வாழ்வில் உள்ளது கலை. இலக்கியத்தில் மட்டும் ஏன் வெளிப்பாடடைய முடியாது ? குறித்த தனி மனித உணர்வுகளுக்கு உட்படுவதையோ, வெளிப்படுத்துவதனையோ ஒப்புக்கொள்ள வெட்கமுறுபவர்களுக்கு, ரஷ்யத் திரைப்பட இயக்குனரும் கவிஞருமான அலெக்சாந்தர் தொவ்ஷெங்கோ சோவியத் எழுத்தாளர்களின் 2வது கோங்கிரசில் பேசிய சில வாசகங்களை சமர்ப்பிக்கலாம்.
- உங்களைப்போலவே நானும் மக்களை நேசிக்கிறேன், மக்களுக்கு பணியாற்றுவதில்த்தான் எனது சொந்த வாழ்க்கைக்கு அர்த்தமிருக்கிறது என்பதை உணர்கிறேன். நான் அனைத்து தேசங்களுக்கிடையே சகோதரத்துவத்தின் வெற்றியை நம்புகிறேன், கம்யூனிசத்தை நம்புகிறேன். ஆனால் செவ்வாய்க் கிரகத்தை வெற்றிகொள்ளும் முதற் பயணத்தில் எனது அன்புக்குரிய சகோதரனோ, மகனோ பிரபஞ்ச வெளியில் எங்கோ ஓரிடத்தில் மரணத்தைத் தழுவ நேர்ந்தால், அந்த இழப்பின் கஷ்டங்களை வெற்றி கொண்டுவிட்டேன் என்று சொல்லமாட்டேன். என் துயரத்தை நான் அவர்களுக்குச் சொல்லுவேன். அந்த பிரபஞ்சவெளிகளை நான் சபிப்பேன். இரவு முழுவதும் என் தோட்டத்தில் அமர்ந்து, பூத்துக் குலுங்கும் செர்ரியின்மேல் உள்ள வானம்பாடிகள் அஞ்சிவிடாமலிருப்பதற்காக, அதன் கீழ் முத்தமிட்டுக் கொள்கிற காதலருகளுக்கு இடையூறு இல்லாமலிருப்பதற்காக, எனது விம்மல்களை தொப்பியினால் மறைத்துக் கொண்டு நான் அழுது கொண்டிருப்பேன்.
- அனார்
No comments:
Post a Comment