Sunday, 19 May 2013

கவிதை முகம்

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் (இந்தியா)

----------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக் கவிஞர் அனார் எழுதிய இரண்டாவது கவிதைத் தொகுதி “எனக்குக் கவிதை முகம்”. இதில் முப்பத்தொரு கவிதைகள் உள்ளன. இயற்கை, வன்முறை, பிரிவு, சுயம்பேசுதல், தத்துவம், காதல் என பாடுபொருள்கள் பல வகைப்படுகின்றன. இவரது மொழிநடை சற்றே முறுக்கேறி நிற்கிறது. புதுப்புது சொற்பிரயோகம் வியப்பளிக்கிறது. இதனாலேயே நல்ல கட்டமைப்பு கவிதைகளில் அமைந்து விடுகிறது. முதல் வாசிப்பில் பிடிபடாதவை, மீள்வாசிப்பில் நம்மைக் கவர்கின்றன. தன் சுதந்திரத்தை அளவோடு, அழகாய்ப் பயன்படுத்தும் அனார் நல்ல பல கவிதைகளுக்குச் சொந்தக்காரர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

“நான் பெண்” என்ற கவிதை முதலில் நகுலனை நினைவுபடுத்தி, பின் பாரதியாரை எண்ண வைக்கிறது.

கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்

எனப் பெண்மை விஸ்வரூபம் காட்டுவது ரசிக்கத்தக்கது.

தாபம் பற்றி பேசும் “தணல் நதி” ஒரு நல்ல கவிதை.

விசமத்துடன் உதட்டைக் கடித்து
நெளியும் இவ்விரவில்
ஓர் முத்தத்தைப் பற்றவை

என்கிறார் கவிஞர்.

என் முன் தொங்குகிறது
தணல் நதியாய் இரவு

என்னும் போது ஓர் அழகான படிமம் அமைந்து விடுகிறது. மிகவும் தேர்ந்த சொற்கள் இக்கவிதையில் வந்து விழுந்துள்ளன.

மேகங்களை ஓட்டிச் செல்கிறது காற்று என்ற சொல்லாட்சி, லகானைக் கையில் பிடித்து மொழியை நடத்திச் செல்லும் அழகைக் காட்டுகிறது.

'குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்' சரியான கவிதை! “ஒரு வயல் வெளியளவு சொற்கள் இருந்தன என்னுள்” என்ற வரியின் ஆழ, அகல, உயரம் அசாதாரணமானவை. இது உருவாக்கும் அர்த்தவெளி பரந்துபட்டது. ஒரு மனிதக்குரல் இக்கவிதையில் ஆராதனை செய்யப்பட்டுள்ளது. அந்தக் குரலுக்குள் உட்கார்ந்து தவம் மேற்கொண்டிருக்கிறார் என்பது மிகையல்ல.

உன் குரலில் வைத்திருக்கிறாய்
முத்தங்களால் நிரம்பிய மாயப்புரம்

என்ற வரிகளில் அழகான படிமம் நம்மை மகிழ்விக்கிறது.

அனைத்து ருசிகளும் உள்ளதுதான்
உன் குரல் என்ற திராட்சை ரசம்

என்ற முத்தாய்ப்பு கவிதையை அதிக உயரத்துக்கு தூக்கிச் சென்றுவிட்டது. இத்தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதை என ஒன்றை மட்டும் குறிப்பிட முடியாது. ஆகவே இதுவும் ஓர் ஆகச் சிறந்த கவிதை என்பது என் துணிபு!

“மேலும் சில இரத்தக் குறிப்புகள்” என்ற கவிதை மனத்தை வருத்துகிறது. குழந்தை விரல் இரத்தம், பெண்ணின் இரத்தம், கொல்லப்பட்ட குழந்தையின் இரத்தம், வன்மத்தில் இரத்த வாடை, வேட்டையில் இரத்த நெடி எனப் பல வகையான இரத்தம் காண வேண்டியிருக்கிறது என்று ஆதங்கப்படுகிறார். “நிழலின் அலறல்” சிக்கலான வெளியீட்டு முறையில் அமைந்துள்ளது.

இழந்து விட்ட சொர்க்கத்தின்
சாபம் படிந்த மணல் திட்டுக்களில்
சபிக்கப்பட்ட தீர்ப்புகளாய்
எனதற்ற நீ
உனதற்ற நான்

என்ற முடிவில் முன் நிற்கிறது பிரிவு! இன்னும் தெளிவும், பத்தி பிரித்தலும் அமைந்தால் இக்கவிதை சென்று சேரும் வாசகர் வட்டம் பெரிதாகும்.

“காதலைக் கொல்லும் தேவை” அழுத்தமான காதல் கவிதை! வழக்கமான புதிய சிந்தனை, கவிதையின் இறுதியில் அற்புதமான படிமமாக அமைந்துள்ளது வண்ணத்துப்பூச்சி! என்ன மாதிரி வண்ணத்துப்பூச்சி தெரியுமா? முத்தம் கண்களாகவும், பெயர் சொல்லி அழைத்த கணங்கள் நிறங்களாகவும் கொண்டதொரு அபூர்வ வண்ணத்துப்பூச்சி!

காதலித்தவரை மணக்க முடியாமல் போகும் அனுபவம் பலருக்கும் பழக்கமானதுதான். அது போன்ற ஒரு சூழல் இக்கவிதையின் பாடுபொருளாகியுள்ளது.

உன் குரலின் இனிய ரகசியங்களை
சிரிப்பை
வானத்தில்
எறிந்து விட்டேன்

என்ற வரிகள் அப்படி ஒரு ஆசையை முன்வைக்கும் அதே நேரத்தில், அது சாத்தியமற்றது என்பதையும் சொல்லிவிடுகிறது. இக்கவிதையின் கட்டமைப்பு கவனத்தை ஈர்க்கிறது.

“பருவ காலங்களைச் சூடித்திரியும் கடற்கன்னி” என்ற கவிதையில் கதைத் தன்மை காணப்படுகிறது. “சிறுமிகளில் மடி கொள்ளாத வெண் சிப்பிகள்” அரிய யதார்த்தக் காட்சியாக உள்ளது. “மேகங்களை வேட்டையாடுகிறாள்” போன்ற புனைவுக் காட்சிகளும் இக்கவிதையில் இடம்பெற்றுள்ளன.

மின்னல்கள் கூக்குரலிட்டு கூவி வெடிப்பதெல்லாம்
கடற்கன்னியில் பெயரைத்தான்

என்பது நல்ல கற்பனை! இக்கவிதையை மீண்டும் மீண்டும் படித்தாலும் புதுமை மாறாமல் இருக்கிறது.

தலைப்புக் கவிதையான “எனக்குக் கவிதை முகம்” இருண்மையோடு காணப்படுகிறது. “அதோ வருகிறான் மாவீரன்…” என்னும் காட்சியும் அதைத் தொடரும் வரிகளும் தொடர்பில்லாமல் துண்டு துண்டாக நிற்பது போல் தெரிகின்றன. இரண்டு முயல்கள் என்னும் குறியீடு எதைக் குறிக்கிறது? “பெண் பலி” சமூக அவலத்தைச் சுட்டுகிறது. பெண்ணுரிமைக்கான குரல் பதிவாகியுள்ளது.

என் முன்தான் நிகழ்கிறது
என் மீதான கொலை!

என்னும் முத்தாய்ப்பு கவிதைக்கு வலிமையூட்டுகிறது.

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

என்ற பொருளாழமிக்க சினிமாப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

“பிச்சி” ஒரு பாலியல் கவிதை. மறை பொருளாய், நாசூக்காக ஒரு கூடலைச் சொல்கிறது. பாணனின் இசை, மயக்க இழைகள், மாயத்திசை, கத்திகள் பய்ந்த கவிதை என எங்குதான் கிடைக்கின்றன இந்த சொல்லாடல்கள்?

வானம் பூனைக்குட்டியாகி
கடலை நக்குகிறது

என்ற கவிதையின் கடைசி வரிகள் தருகின்ற ஒரு பூதாகரமான படிமத்தை. “பசுமையின் உச்சமாகி நான் நிற்கிறேன்” என்ற வரி (கவிதை: “மின்னல்களைப் பரிசளிக்கும் மழை”) கவித்துவத்தை எல்லா சொற்களிலும் நிரப்பி, வாசகர்கள் முன் நீட்டுகிறது. இக்கவிதையின் தொடக்க வரிகள்,

மழையாய் பெய்து குளிர்ந்தன
எனக்குள் உன் பேச்சு

இந்த வரிகள்,

உன் பேச்சில்
மலர்களாய் தொடுக்கப்பட்டுள்ளன
எனக்கான ப்ரியங்கள்

என்ற கவிதை வரிகளை நினைவுபடுத்துகின்றன.

நிறைவாக, மொழி வளம் நன்கு கைவரப்பெற்றுள்ளது. சுயபாணி வலுவூட்டுகிறது. கலை நேர்த்தி பாராட்டுக்குரியது. கவிதைத் தலைப்புகள் அழகாக அமைந்துள்ளன. ரசமானவை! நல்ல மன நிறைவைத் தரும் தொகுப்பு.


----------------------------------------------------------------------------------------------------------

அம்ருதா ஏப்ரல் - 2013

Monday, 25 March 2013

பொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்

- கிரி ராமசுப்ரமணியன்
------------------------------------------------------------------------------------------------------

வண்டறுத்த சோலையிலே
மரமழுது போறதுபோல்
நின்டழுவன் மச்சான்
உங்கெ நினைவுவாற நேரமெல்லாம்


இஸ்ஸத் ரீஹானா எம்.அஸீம் என்கிற 'அனார்'. இலங்கையைச் சேர்ந்த முக்கியமான இளம் தலைமுறைப் பெண் கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். கிழக்கு இலைங்கையின் சாய்ந்த மருது என்னும் ஊரைச் சேர்ந்த அனார் தொகுத்து 'க்ரியா' வெளியீடாக வெளிவந்திருக்கும் கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்களே 'பொடுபொடுத்த மழைத்தூத்தல்' என்னும் இந்தப் புத்தகம்.

நாட்டார் பாடல்கள் அல்லது கிராமியப் பாடல்கள் என்பவை நாட்டுப்புற மக்கள் தங்கள் வேலை நேரங்களின் இடையே வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காகப் பாடுபவை. இவை எழுதிவைத்துப் பாடிய பாடல்கள் அல்ல. இவற்றைப் பாடியவர்கள் ஏட்டுக்கல்வி அறிந்தவர்களாக இருந்திருப்பார்களா என்பதுவும் சந்தேகமே. ஆக வாய் வழியே பாடி செவி வழியே கேட்டு சந்ததிகள் வழியே பயணப்பட்டு இவை காலங்காலமாய் வாழ்ந்து கொண்டு இருப்பவை. கைப்பேசியிலேயே வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் வசதி பணியாளர் அறைகளில் தொலைக்காட்சி பார்க்கும் வசதி என்று வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில் இந்தவகைப் பாடல்கள் இன்னமும் பரவலாகப் புழக்கத்தில் உள்ளனவா என்பதுவும் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு இவை வாய்வழிச் செவிவழி கொண்டு செல்லப்படுமா என்பதுவும் கேள்விக்குறியே. 

காலங்காலமாக நம் கிராமங்களில் வாழ்ந்து வரும் இப்பாடல்கள் நம்மவர்களின் நாகரிக வளர்ச்சியில் மூச்சடைத்து அழிந்திடாமல் இருக்க அவ்வப்போது சிலர் இவற்றை ஆவணப்படுத்துகிறார்கள்.

சிலப்பதிகாரம் போன்ற பெரும் காவியங்கள் கூட அடிப்படையில் நாட்டார் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு படைக்கப்பட்டவையே என்ற கருத்தும் உண்டு. 

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு நம்மிடையே பிரபலமானது நடிகர் சிவாஜிகணேசன் நடித்த படத்தின் மூலம் என்பது நாம் நன்கு அறிந்த விஷயம்தான். ஆனால் அதற்கு முன்னால் கிராமங்களில் கட்டபொம்மனின் வழிவந்த கிராமத்துக் கிழவிகள் அவன் வரலாறை நாட்டார் பாடல் தொனியில் பாடிக் கொண்டிருக்க அதைக் கேட்ட மபொசி அவற்றை ஆவணப்படுத்தி வெளிக் கொணர்ந்ததே கட்டபொம்மன் கதை வெளிவந்ததன் முதல்படி. மபொசி கட்டபொம்மன் வரலாறை வெளிக் கொணர்ந்திரா விடில் பத்தொடு பதினொன்றான சிற்றரசர்களுள் ஒருவனாக அவன் மறக்கப்பட்டிருப்பானோ என்னவோ.

(எட்டையாபுர வழி வந்தவர்கள் கட்டபொம்மனைக் கொள்ளையனாகப் பார்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த விஷயத்தில் மபொசி மீதும் சிவாஜிகணேசன் மீதும் தனிக் கோபம் இருப்பது தனிக்கதை)

இப்படி ஒரு சிற்றரசனின் வரலாறே காலப்போக்கில் மறந்து தொலைக்கக் கூடியது எனில்இ யார் ஆதிகாலத்தில் உருவாக்கினார்கள் என்றே தெரியாத இதர நாட்டார் பாடல்கள் எம்மாத்திரம்? ஆக இத்தகைய பாடல்களைத் தொகுத்துப் புத்தக வடிவில் கொண்டு வருபவர்கள் ஒருவகையில் ஒரு வட்டாரத்தின் ஒரு காலகட்டத்தின் வரலாறைப் பதிவு செய்கிறார்கள். 

வரலாறு? காலகட்டம்?

ஆம் பேரிலக்கியங்கள் மட்டுமல்ல சின்னச்சின்ன நாட்டார் பாடல்களும் அவை பாடப்பட்ட காலகட்டத்தின் மக்களின் வாழ்வியலை போகிற போக்கில் சொல்லிச் செல்பவைதானே.

நாட்டார் பாடல்களானவை நடவுக்கும் ஏருக்கும் உழவுக்கும் படகு வலிக்கவும் வண்டி ஓட்டும் வேளையிலும் பாடப்படுவது என்று வேலை நேரத்திற்கானது என்று மட்டுமே அல்லாமல் தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரை வாழ்வின் அனைத்து காலகட்டங்களுக்கும் பாடப்பட்டவை. கும்மிப்பாட்டு நெற்குத்திப்பாட்டு ஏற்றப்பாட்டு என்று இவற்றில் பல கிளைவகைகள் இருக்கின்றன.

கிழக்கிலைங்க நாட்டார் பாடல்களில் அனார் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருப்பவை காதல் சுவையை மட்டுமே. 

கத்தி எடுத்துக்
கதிர் அரியும் வேளையிலே
கள்ள எண்ணம் வந்து
என்ட கையறுத்துப் போட்டுதடி 

இப்படி தோராயமாக ஒவ்வொன்றும் நான்கு அடிகள் கொண்ட பாடல்கள். 160 பாடல்களை அனார் தொகுத்திருக்கிறார். படிக்க வசதியாக அவற்றை 'அவன்' பாடுவதாக 80 பாடல்களையும் 'அவள்' பாடுவதாக 80 பாடல்களையும் கோர்த்து ஜோடிப் பாடல்களாக ஒன்றுக்கு ஒன்று கேள்வியும் - பதிலுமாய்த் தந்திருப்பது படிக்க இனிமை.

உன்னை மணந்து
உயர்ந்த கட்டில்மேல் வைத்து
கன்னந்திருப்பிக்
கதைக்க வெகு நாட்களில்லை

என்று 'அவன்' காதற்சுவை பாடினால்....

ஏறப் பழுத்த
இரு சிவப்பு மாம்பழத்தை
என்ன வந்தாலும்
எடுத்தருந்து என்கிளியே

என்று 'அவள்' காமத்துப்பால் பருகச் சொல்கிறாள்.

நாட்டார் பாடல்களின் சிறப்பு ஒன்றேயொன்றுதான். இவை கவிஞனின் கவித்திறமையை உவமைத் திறனை இலக்கண சுத்தத்தை இலக்கிய ஆளுமையை என்று பெரிய விஷயங்களுக்குள் எல்லாம் நுழையாமல் ஒரு சாமானியனின் கணநேரச் சிந்தையை உள்ளதை உள்ளபடிக்கு மொழிபெயர்ப்பனவாக இருப்பதுதான். கவிக்கட்டமைப்பின் கவனச் சிதறலின்மை இவற்றைப் போலியற்ற கவிதையாக வாழ்வாங்கு வாழவைக்க உதவுகின்றன.

கிழக்கிலங்கை நாட்டார் பாடல்களைப் பாடினதில் முஸ்லிம் பெண்களின் பங்கு அதிகமானது என்கிறார் அனார். பிரிவு இரங்கல் தூதுப் பாடல்கள் அவற்றில் தூக்கலாகத் தெரிபவை.

இந்தப் புத்தகத்தின் மூலம் நமக்குக் கிடைப்பவை அந்த சுவைமிக்க நாட்டார் பாடல்கள் மட்டுமல்ல; கூடவே அவை ஒவ்வொன்றிலும் கையாளப்பட்டிருக்கும் கிழக்கிலங்கைப் பிராந்தியத்தின் பிரத்தியேக வார்த்தைகள் சிலவற்றுக்கான அர்த்தங்களும் கூடவே. சுமார் பத்து டஜன் வார்த்தைகளுக்கு பொருளும் சேர்த்தே தரப்பட்டுள்ளது.

சில உதாரணங்கள்:

பொடுபொடுத்த - துளித்துளியாய்ப் பெய்யும் மழை
ஒழுங்கை - வீதி
நுளம்பு - கொசு
பொறுதி - பொறுமை.

அள்ளினால் தங்கம்
அணைச்செடுத்தால் அமிர்த குணம்
கொஞ்சினால் இஞ்சி மணம்
கோவைசெய்தால் வேர்வை மணம்

ஆம்! வேர்வை மணத்தின் இனிமைதான் நாட்டார் பாடல்களின் இனிமையும் கூட!


பொடுபொடுத்த மழைத்தூத்தல்
(கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள்)
க்ரியா பதிப்பகம் 
தொகுப்பு: அனார்
72 பக்கங்கள் ஃ விலை ரூ. 150/=
------------------------------------------------------------------------------------------------------
நன்றி : http://omnibus.sasariri.com/2013/01/blog-post_30.html?spref=fb

Tuesday, 19 March 2013

Award for Excellence in the Filed of Literature
( Launched by Vijay TV – Sigaram Thotta Pengal - 2013 )

__________________________________________________________________________









பெண் தான் வாழ்வதற்கும், தன்னை நிரூபிப்பதற்கும் நிச்சய்ம் போராட வேண்டியிருக்கிறது. இதற்கு விதிவிலக்கான பெண்கள் எவரும் இல்லை என்றே எண்ணுகிறேன். 

அவள் கவிதை எழுதினாலும் எழுதாவிட்டாலும், சிறுமியாக இருந்தாலும், முதிர்ந்தவளானாலும், படித்தவளானாலும், பயிலாதவளானாலும், கிராமத்தில் வாழ்ந்தாலும், நகரத்தில் வாழ்ந்தாலும்... இனம், மொழி, மதம், நாடு கடந்து, உலகமெங்கும் பெண் மரணம் வரை போராட வேண்டியிருக்கிறது. அந்த சக்தியை அவள் பெற்றுமிருக்கிறாள்.

இந்நிகழ்வு, என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல உந்துதலையும், உறுதியையும் ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், நண்பர் திரு. அன்டனி மற்றும் திரு. சுந்தரராஜன் அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன். மேலும் என்னுடைய நூல்களைப்பதிப்பித்த பதிப்பகங்களான காலச்சுவடு, க்ரியா, மூன்றாவது மனிதனுக்கும் நன்றிகள். குறிப்பாக காலச்சுவடு கண்ணன், க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களோடு இந்தப் பெருமிதத்தைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

அனைத்தையும் சாத்தியமாக்கித் தந்த இறைவனுக்கும் என் அஸீமிற்கும் நன்றி.
 
                                           
                                         நீயா நானா அன்ரனி, அஸீம், அனார்

                              நீயா நானா அன்ரனி, அஸீம், அனார், சுந்தரராஜன், வளர்மதி அம்மா



                                          அனார், தமிழச்சி தங்கபாண்டியன்


- அனார்
18.03.2013




for more, please click the bellow link:

https://www.youtube.com/watch?v=E4PHAtdUuMo

Monday, 4 March 2013

சிகரம் தொட்ட பெண்கள் -பெண் சாதனையாளர் விருது விழா-2013
-------------------------------------------------------------------------------------------------


என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஒரு செய்தியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். சமூக செயற்பாடு, விஞ்ஞானம்,தொழில் நுட்பம், அரச சேவை, மருத்துவம், கல்வி, களிப்பூட்டல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளிலும் அசாதாரணமான அடைவுகள் மூலம் சாதனைகளை நிலை நாட்டிய இளைய தலைமுறைப் பெண்களை 'சிகரம் தொட்ட பெண்கள் ' என்ற தலைப்பில் விஜய் டி .வி . ஆண்டு தோறும் கௌரவித்து வருவதைப் பலரும் அறிந்திருப்பார்கள்.

இந்த வகையில் இவ் ஆண்டின் இலக்கியத் துறைக்கான சாதனைப் பெண்ணாக கவிஞர் அனார் அவர்கள் விஜய் டி .வி. யால் அறிவிக்கப் பட்டுள்ளார்.

அவரையும், வெவ் வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த இதர பெண்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 10.03.2013 அன்று சென்னை விஜய் டி .வி. கலையகத்தில் நடை பெறவிருக்கின்றது.

பெரும் பரப்பொன்றிலிருந்து அவர் தேர்வு செய்யப் பட்ட செய்தியானது மூன்று விதங்களில் என்னை மகிழ்ச்சி கொள்ள வைக்கின்றது.

1. விருது பெறத் தகுதியான எழுத்தாற்றலை அவர் கொண்டிருக்கிறார்.

2..அவர் ஓர் ஈழத்தவர் என்ற பிரதேசம் சார்ந்த பெருமிதம்.

3.அறிமுகமான நாள் தொட்டு இன்று வரை கீறல் விழாத அவருடனான இலக்கியம் சார்ந்த இனிய நட்பு.

அவருக்கு வழிகாட்டிகள் என யாரையும் என்னால் குறிப்பிட முடியவில்லை.அவர் சுயமாக உருவாக்கிக் கொண்ட ஈரம் ததும்பும் மொழியும், கவிதைகளூடாகப் பரவும் காதல் வாசனையுந்தான் இத்தகைய 'சிகரங்களை ' நோக்கி அவரை அழைத்துச் செல்கின்றன.

சிகரம் என்பது ஓர் எல்லையின் குறியீடு. அதற்குப் பின் எட்ட எதுவுமில்லை என்றாகி விடும்.ஆனால் அனாருக்கு எல்லை தாண்டும் வல்லமை உண்டு என்பதை நான் அறிவேன்.

என் மகிழ்ச்சியில் பங்கு கொண்டு அவரை வாழ்த்து மாறு அன்புடன் தோழர்களையும்,தோழியரையும் கேட்டுக் கொள்ளுகின்றேன். 

உமா வரதராஜன்,
கல்முனை ,
இலங்கை. 
27.02.2013

Saturday, 26 January 2013

பொடுபொடுத்த மழைத்தூத்தல் 
-------------------------------------------------------------------------------------------------






மந்திரப்பூச்சிகளோடு, ஒரு வெளி நிறைய இசை : 
பின்னுரையிலிருந்து

என்னுடைய குழந்தைப் பருவத்தை, மென்மையான கனவு போன்ற உலகம் சூழ்ந்து வியாபித்திருந்தது. அந்தக் கனவுக்குள்ளே தும்பிகளைப் போல அலைந்து திரியும் சிறுவர் படைக்கு நானே தலைவியாக இருந்தேன். 

அணில் மிச்சம் வைத்த பாதிப் பழங்களைத் தின்பதற்காகவோ, அணிலுக்கென எந்தவொரு பழத்தையும் விட்டுவைத்துவிடக் கூடாது என்ற பொறாமையினாலோ என்னுடைய மாலைப்பொழுதுகள் அனைத்தும் மரங்களிலேயே கழிந்தன. 

வீட்டுக்கருகே அமைந்திருந்த தாமரைக்குளத்தில் தூண்டில்போட்டு மீன் பிடிப்பது, ஆமைகளில் ஏறியிருந்து சவாரி போவதுபோல் பாவனை பண்ணுவது, புதிய உடைகள் தைத்து மீதமான துணிகளைச் சேகரித்து “பொண்ணும் மாப்பிள்ளையும்” விளையாட்டுக்காக பொம்மை செய்து கல்யாணம் பண்ணிவைப்பது, மண்ணில் குழி தோண்டி நீரூற்றிக் குடைக் கம்பியைத் துலாக்காலாக்கி நீர் இறைப்பது, பழுத்து விழுந்த பலா இலைகளைப் பணமாகப் பாவித்து தாமரைப்பூக்களையும் தட்டுச் செவ்விரத்தைகளையும் வியாபாரம் பண்ணுவது, சுடுசுடு மாம்பழம் விளையாடுவது என்றெல்லாம் அன்று விளையாட்டுக்கள் எங்களை விளையாடின. வானத்தைத் தொடுவதற்கென்றே ஆடியது எங்கள் பொன் ஊஞ்சல்.

இத்தனை நினைவுகளின் மத்தியிலும் அன்றைய நாளில் எனக்கு மாத்திரம் வேறொரு புதையல் வாய்த்திருந்தது. என்னுடைய வீட்டிற்கருகே மற்றொரு பகுதியில் சிறிய களிமண் குடிசை, குடிசையின் அருகே உயரமான மரம், மரத்தின் நடுப் பகுதியில் ஒரு அழகிய பரண் அமைந்திருந்தது. அந்தப் பரணில் எப்போதும் ஒரு இளைஞர் நிறைய புத்தகங்களோடும் நண்பர்களோடும் இருப்பார். அவரைச் சூழச் சிரிப்பும் பாடல்களும் கேட்டபடி இருக்கும். அவ்விளைஞர் இனிமையாகப் பாடுவார். குடிசைக்குள் மெலிந்த உடல்வாகு கொண்ட ஒரு மூதாட்டி இருந்தாள். மிகச் சிறுமியான என்னை யாருமே அந்தப் பரணில் ஏற விட்டதில்லை. பெத்தாவின் அருகே என்னை விட்டுவிடுவார்கள். அம்மூதாட்டியை பெத்தா என்றே அழைத்தேன்.

களிமண் தரையில் பன்பாயில் கால்களை நீட்டி பெத்தா அமர்ந்திருப்பார். அருகே செம்பு வட்டாவும், படிக்கமும், சிறிய வெற்றிலை உரலும், சிவப்பு நிற சாயம் ஊறிய பனை ஓலை விசிறியும் அவர் அருகே இருக்கும். சிறு உரலைப் பக்கத்தில் எடுத்து பாக்கு, சுண்ணாம்பு, சிறிது புகையிலை, இரு நீர்வெற்றிலைகள், கைப்பு, கராம்பு இப்படி கூட்டுச் சேர்த்து உரலில் இட்டு இடித்துக்கொண்டே ஒவ்வொரு கவியாகப் பாடிக்கொண்டே இருப்பார். வெத்திலாக்குச் சப்பும் மணம், இரத்தச் சிவப்பான நாக்கு மேலும் கீழும் அசைய, உதடுகளில் சிவப்புச்சாறு ஊறும்... பிறகென்ன பெத்தா பாடும் கவி காற்றில் மணக்கும். சிவந்த உதடுகளில் இருந்து வரும் இசையைக் கேட்டு மயங்கி இருப்பேன். கொஞ்ச நாட்களிலே நானும் பெத்தாவுடன் சேர்ந்து பாடத் தொடங்கிவிட்டேன். நாட்டுப்புறப் பாடலின் இசைதான் முதலில் என்னை ஆக்கிரமித்திருந்தது. பிறகு வந்த நாள்களில் சபைகளில் என்னை யாராவது கவி பாடும்படி கேட்டால், ஆர்வ மேலீட்டால் மனனமாகியிருந்த அத்தனை நாட்டார் பாடல்களையும் மூச்சுவிடாமல் பாடிக்காட்டும் சிறுமியாக நான் இருந்தேன். எனது வீட்டிலும் அயலிலும் இருந்த இளவயதினர் பல விதமான மத ரீதியாக அமைந்த இசை வகைகளில் ஆர்வமுற்றிருந்தனர் அல்லது திரை இசையைப் பாடும் நாகரிகம் தெரிந்தவர்களாக இருந்தனர். ஆகச் சிறுமியான நான் கிழவிகள்போல கவி இசைப்பது வீட்டில் விரும்பப்படவில்லை. வயதிற்குப் பொருத்தமற்ற செயலைச் செய்வதாகக் கருதினர். எங்கள் கிராமத்தில் சிறுவர்களின் ஏதேனும் ஒரு பழக்கத்தை நிறுத்துவதற்கு அன்றைய பெரியவர்கள் பலவகையான தண்டனைகளை வழங்குவதுண்டு. வேறொருபோதும் அப்பழக்கத்தை அல்லது அச்செயலைச் செய்யச் சிறுவர்கள் துணிவதில்லை. அனைத்துத் தண்டனைகளுக்கும் ஆரம்பமாக அவர்கள் செய்வது இதுதான் : “பழுத்த மிளகாயை” இரண்டாகப் பிளந்து, உதட்டில் வைத்து நன்றாகத் தேய்த்துவிடுவார்கள். வாயைக் கழுவுவதற்கோ தண்ணீர் குடிப்பதற்கோ அனுமதிப்பதில்லை. கவி படிப்பதாகச் சொல்லிக்கொண்டு, வாயைத் திறந்தால் “வாயில கொச்சிக்காய் போடுறது தப்பாது” என்று எனக்கும் பலமான எச்சரிக்கை விடப்பட்டது. ஒருமுறை ஏற்கனவே இக்கொடிய தண்டனை எனக்கு நிறைவேறியிருந்த அவமானத்திலும் பயத்திலும் முற்று முழுதாகக் கவி படிப்பதை அன்றோடு நிறுத்திவிட்டேன்.

வெள்ளை முக்காடிட்ட அந்த முதிய பெண் உருவம் புகைபோல நெளிந்து காற்றில் கரைந்துபோனாலும் காற்றை நீவிப் படபடக்கின்ற அக்குரலின் ஓசையைக் கூர்ந்து கேட்கின்றேன். இந்த நினைவை இவ்விதம் தீட்டித்தீட்டி வைரம் பாய்ந்த புதையலாக ஒளிரச் செய்யும் என்னுடைய கனவுகள். அந்த ஒளியின் முன் தீராத தனிமையை எடுத்து வைத்துவிட்டுக் கண்களை மூடிக்கொள்கிறேன்.

என் ஊரின் கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே வயற்பரப்பும் விரிந்து பரந்து கிடக்கின்றது. மிகுந்த வனப்பான இந்த நிலப்பகுதியின் பாரம்பரிய வாழ்க்கை முறைமைகளில், சொற்பமானவைகளைக் கண்கூடாகக் கண்ட, பெரும்பாலானவற்றை முதியோர்களிடமிருந்து செவி வழியாகக் கேட்டறிந்த கடைசிப் பரம்பரையில் ஒருத்தி நான் என நம்புகின்றேன்.

கிழக்கு இலங்கையில் பல தொன்மை வாய்ந்த கிராமங்கள் உள்ளன. இயற்கையிலேயே பாட்டு இயற்றும் மேதமை கொண்ட தமிழ், முஸ்லிம் மக்கள் இக்கிராமங்களில் இருக்கின்றனர். என்னுடைய தொன்மை வாய்ந்த கிராமமான சாய்ந்தமருதிலும் இருந்திருக்கின்றனர். முஸ்லிம்கள் இன்று பெருபான்மையாக வாழும் தென்கிழக்குப் பிராந்தியம் என்பது ஆதிகாலம்முதல் “ருகுனு” தேசத்தின் ஒரு முக்கியப் பிரிவாக இருந்திருக்கின்றது. “காவன்திஸ்ஸயின் ராசதானி” கி.மு. 100இல் உருவாக்கப்பட்டபோது இத் தென்கிழக்குப் பிரதேசம் விவசாய வளமிக்க இடமாக இருந்திருக்கின்றது. வர்த்தகம், வாணிபம் மேலோங்கிய இப்பிரதேசத்தில் அரேபியக் கப்பல்கள் தென்கிழக்குக் கரைக்கு “தங்கத் தளபாடங்களை துட்டகெமுனு” அரசனுக்கு எடுத்து வந்ததாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

முஸ்லிம் முன்னோர்களின் பரம்பரையினர் அரேபியர்கள், கேரள வியாபாரிகள், தென்னிந்திய வியாபாரிகள் இங்கு வந்து வாழ்ந்துள்ளதாக வரலாற்றில் சொல்லப்படுகின்றது. மிக நீண்ட காலமாக இம்மக்கள் விவசாயம், மாடு வளர்ப்பு, வியாபாரம், மீன்பிடித் தொழில் போன்றவற்றைப் பிரதான பரம்பரைத் தொழில்களாக கொண்டிருந்தனர். ஆரம்பத்திலிருந்தே நெசவுத் தொழிலும் கைப்பணித் தொழில்களும் கிழக்கு மாகாணக் கரையோரப் பகுதிகளின் தொழில்களாக இருந்துள்ளன.

முஸ்லிம் பெண்கள் வயல்களில் வேலைசெய்திருக்கின்றனர். கதிர் பொறுக்குதல், பூவலில் இருந்து தண்ணீர் சுமந்து வருதல், விறகு பொறுக்குதல், வீடுகளில் கைத்தொழில்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். பன்களைப் பிடுங்கிவந்து பாய்கள் இழைத்தல், கூடை பின்னுதல், தென்னோலைக் கிடுகு இழைத்தல், நெல் குற்றுதல், உரலில் மா இடித்தல், புடவை நெய்தல் ஆகிய பல தொழில்களைப் பெண்கள் செய்திருக்கின்றனர். ஆண்களும் பெண்களும் இவ்விதமான தொழில்களில் ஈடுபடும்பொழுது பிறந்தவைதான் இந்நாட்டுப்புறப் பாடல்கள். இந்நாட்டுப்புறக் கவிகளை பாடியதிலும், அடுத்த சந்ததிகளுக்குக் கையளித்ததிலும் முஸ்லிம் பெண்கள் பாரிய பங்களிப்பை செய்துள்ளனர். இக்கவிகளில் பெண்கள் பாடிய கவிகளே அதிகமாக காணப்படுகின்றன. மனனமிட்டு வாய் மொழியாக இவை பாடப்பட்டு ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்குக் கைமாறி வந்திருக்கின்றது. நாட்டார் பாடல்கள் பாடப்பட்ட காலம் எது என்பது நிச்சயமாகத் தெரியாது. 

வேலை நேரக் களைப்பை மறப்பதற்காகவும் தங்களுக்குத் தாங்களே உற்சாகமூட்டிக்கொள்வதற்காகவும் பலவிதமான சந்தர்ப்பங்களில் இப்பாடல்களைத் தொன்மையான கிராமிய மனிதர்கள் பாடியிருக்கின்றனர். அவர்களது இன்ப துன்பங்கள், வாழ்க்கை, பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்களையும் உள்ளடக்கிய மண்பாட்டுக்களாய் அவை உருவாகியிருக்கின்றன. பிரிவும் இரங்கலுமான நாட்டுப்புறப் பாடல்களையும், தூதுப் பாடல்களையும் அதிகம் பாடியவர்கள் பெண்களே ஆகும். அன்றைய காலத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் உரையாடலைத் தொடங்குவதே இப்பாட்டின் மூலமாகவிருக்கும். பதில் சொல்வதுகூட மற்றொரு பாடல் மூலமாகவே இருந்திருக்கிறது. உடனுக்குடன் இப்படிப் பாடிப்பாடி உரையாடியிருக்கின்றனர் அக்காலப் பெண்கள். பெண்கள் கூடி ஒன்றாகக் குழுமியிருந்து பாய்களை இழைக்கையில், தென்னோலைக் கிடுகுகளை இழைக்கையில், தண்ணீர் அள்ளி வருகையில் ஒருவர் பாட, இன்னொருவர் அதற்கு பதில் பாடலைப் பாட அவர்களுடைய பொழுதுகள் முழுதும் பாட்டிலேயே கழிந்திருக்கின்றன. பெண்கள் இவ்வாறெனில் ஆண்களும் அவர்களுடைய வேலை இடங்களில் பாடியிருக்கின்றனர். வயல்வெளிகளிலும், கடல் மணலிலும், காவல் புரியும் இடங்களிலும் இவற்றைப் பாடித் தமது தனிமைகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றனர். அப்போதெல்லாம் நெல்முளை வண்டிகள் சேர்ந்து நள்ளிரவுக்குப் பின் வரிசையாகப் புறப்படும். முதல் வண்டிக்காரர் கிராமியக் கவிகளைப் பாடத் தொடங்குவார், அடுத்தது அதற்கு அடுத்தது என்று வண்டிகளின் வரிசையில் இப்பாடல்கள் பாடப்படும். கடைசி வண்டிக்காரர் பாடி முடித்ததும் திரும்ப முதல் வண்டிக்காரர் பாடுவார். இப்படியே பயணம் முடியும்வரை பாடல்கள் தொடர்ந்திருக்கின்றன. 

1950ஆம் ஆண்டுகளிலிருந்து இவை ஆய்வு ரீதியான புத்தகங்களாக தொகுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அனைத்து நாட்டுப்புறக் கலை இலக்கிய அம்சங்கள், பல பிரிவுகளாக உள்ளன. சுமார் 2000 நாட்டார் பாடல்கள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளன. இன்றும் காதல் உணர்வுகள் அதிகம் செறிந்த பாடல்களே என்னுடைய பகுதிகளில் பிரபலமாக இருக்கின்றன. காதல் என்பது அன்று அனுபவமாக மட்டுமன்றி அர்ப்பணிப்பாகவும், அறச்செயலாகவும் இருந்துள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் கிராமங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கும். இத்தொகுப்பிலும் இரண்டு மக்களுடைய கவிகளும் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன. இன்றைய உலகமயமாக்கல், அறிவுப் பெருக்கம், நாகரிக வளர்ச்சி, இலக்கிய மாற்றங்கள் அனைத்தையும் தாண்டி இன்றைக்கும் இக்கவிகளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கின்றது. அதுதான் நாம் இன்னும் அடைய முடியாத ஒன்றாகவும் உள்ளது. தேசம், இயற்கை, மொழி, பண்பாடு, தொன்மையான மனிதனின் நாகரிகம் போன்றவற்றை அறிந்துகொள்ள முயல்வது இன்றைய தலைமுறைக்கு மிகுந்த அவசியம். முற்றிலும் இயற்கையான பசுமையுடனும், நீருடனும், காற்றுடனும், நெருப்புடனும், பறவைகளோடும், விலங்குகளோடும் பிணைந்த இன்னொரு வாழ்க்கையின் மணத்தைப் பூரணமாக உணர்ந்துகொள்ளவும் முடியும் என நம்புகின்றேன். முழுக்கமுழுக்க உணர்விலிருந்து வெளிப்படுகின்ற மண்பாட்டுக்கள் இவை. ஒவ்வொரு சொல்லிலும் உள்ளுறைந்திருக்கும் ஆன்மாவின் பச்சை, காதலின் அப்பழுக்கற்ற வாசனை, ஆணினதும் பெண்ணினதும் கண்களிலிருந்து காதலெனத் தெறிக்கின்றது. அந்தக் கணத்தின் குரலில் இருந்த இசையின் உயிர் ஒருபோதும் அழிவற்றது.

சொல்லில் உள்ள இன்பத்தையும், சொல்வதிலுள்ள இன்பத்தையும் இந்த மண் பாடல்களில் உணரமுடியும். கவியில் ஒவ்வொரு சொல்லும் உயிருடன் அசைந்து, நிறங்களை உதிர்க்கும் மந்திரப்பூச்சியாகிப் பறந்து என்முன் தோன்றுகிறது. இன்றும் கிழக்கிலங்கை மக்களின் பேச்சு மொழியில் ஒருவகை இசைத்தன்மை இருக்கிறது. எங்கள் முன்னோர்கள் அனைவரும் இந்தக் கவிகளோடு இரண்டறக்கலந்த அடையாளமாகத்தான் உரையாடல்களினூடே அந்த ஓசையும் இசையும் தொடர்ந்து வருகிறது. அன்றைய மனித வாழ்க்கையில் வித்தியாசங்கள் பெரிதாகத் தோன்றியிருக்கவில்லை. இருந்த வித்தியாசங்கள், இனங்களைப் பிரித்து வேறுபடுத்தி வைத்திருக்கவில்லை. உணர்வும், வாழ்வும், தேடலும், அக்கறையும் அனைவருக்கும் ஒன்றுபோலவே இருந்திருக்கிறது. இனம், மொழி, ஊர் என்ற பிரிப்பு எல்லைகளற்று, ஆண்களாகவும், பெண்களாகவும் அவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அந்த அடையாளத்தை, ஆகவும் முதன்மையாக மதித்திருக்கிறார்கள். அத்தகைய ஆண்களினதும், பெண்களினதும் அழகிய பொழுதொன்றை நினைவூட்டிக்கொள்ளவும், அந்த பழமையை நெருங்கித் தொடவும் எனக்கு உதவிய மந்திரப்பூச்சிகள் உங்களுக்கும் உதவக்கூடும்.

இந்நாட்டுப்புற கவிகளைத் தொகுப்பதற்கு நினைத்தவுடன், அதன் வடிவத்தை சிதைக்காமல், எளிமையாக அதன் முழுமையோடு தொகுக்க வேண்டுமென விரும்பினேன். அதனால் கவிகளின் முன்னும், பின்னும் கதைச் சுருக்கங்களையோ, கற்பனை உரைகளையோ நான் இணைக்க விரும்பவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக, வரிசைப்படுத்தித் தருவதும் சாத்தியமில்லை. எனவே கவிகளின் உணர்வுகளை விளங்குவதற்கு வசதியாக ‘அவள்’ – ‘அவன்’ எனப் பிரித்து, ஒரு வடிவத்தை ஏற்படுத்தினேன். தொகுப்பதற்கும், வாசித்து விளங்குவதற்குமான வசதிக்காகவே இம்முறையைக் கையாண்டிருக்கிறேன்.

செறிவுள்ள அழகிய காதல் மண்பாடல்களைத் தேர்ந்து தனித்து வெளியிட எண்ணியிருந்தேன். நண்பர் ஆசையையும், ராமகிருஷ்ணனையும் சந்தித்துப் பேசிய சமயம், கிழக்கு முஸ்லிம் நாட்டார் பாடல்களைத் தொகுத்துத் தரும்படி கேட்டார்கள். மிகுந்த ஆர்வத்துடன் இவ்விடயத்தை ஏற்றுக்கொண்டேன். பலமுறை ராமகிருஷ்ணனிடம் இவ்விடயம் தொடர்பாகப் பேசியது என்னுடைய முயற்சிகள் முடிந்தவரை செம்மைப்பட உதவியது. நண்பர் ஆசை இத்தொகுப்பின் மீது கொண்டிருக்கும் அக்கறை மிகுந்த நன்றிக்குரியது. இந்நூலுக்காகப், சிரமங்களைப் பொருட்படுத்தாமல் பல கிராமங்களுக்குச் சென்று, புகைப்படங்களை எடுத்துத் தந்துதவிய எழுத்தாளர். எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களின் அளவற்ற அன்புக்கு மரியாதை செய்கிறேன். மேலும், அவ்வப்போது தேவைப்பட்ட தகவல்களை எனக்குத் தேடித்தந்து, அதைத் தட்டச்சுசெய்து, முழுப் பொறுப்புடனும் விருப்பத்துடனும் வடிவமைத்துத் தந்த என் அஸீமிற்கும் மனமார்ந்த நன்றிகள்.


- அனார்

Cre-A:
New No. 2 Old No. 25
First Floor, 17th East Street,
Kamarajar Nagar, Thiruvanmiyur
Chennai - 600 041.
Tel: 72999 05950 / 044 - 4202 0283
Email: creapublishers@gmail.com