அனாரின் ஆதாரங்களும்....
------------------------------------------------------------------------------------------------------------
காலச்சுவடில் வெளியான என்னுடைய 'காற்றின் பிரகாசம்' (http://www.kalachuvadu.com/issue-161/page62.asp ) கட்டுரையில் ஊடறு றஞ்சி என்பவர் நான் குறிப்பிட்ட ஒரு விடயத்தை பொய் என்று கூறி ஊடறுவில், றஞ்சி அப்பழுக்கற்ற சில 'உண்மைகளைத்' தெரிவிக்க முயன்றிருக்கிறார்.. அது ஏற்கனவே அவருக்குள்ள 'நற்பெயருக்கு' மேலும் வலுச்சேர்த்துள்ளது என்பதை நான் கூற விரும்புகிறேன்.
ஊடறு றஞ்சி : “ ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ஊடறு அமைப்பு வெளியிடுவதற்குக் கேட்டிருந்தது. சேரனிடம் முன்னுரை பெற்று, தொகுப்பைக் கொண்டுவர வேண்டும் என்பது எனக்கிருந்த நீண்ட நாள் ஆசை. அது சரிநிகர் ஊடாகவும் ‘மரணத்தினுள் வாழ்வோம்’ தொகுப்பினூடாகவும் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு. எனவே ஊடறு றஞ்சி தன் அன்றைய அரசியல் நிலைப்பாட்டால் சேரனிடம் முன்னுரை வாங்கினால் என்னுடைய புத்தகத்தை அவர்கள் கொண்டுவர முடியாது எனத் தெரிவித்தார்.இந்தக் கட்டளையை மீறினால், ஊடறுவிலிருந்து என்றைக்குமாக என்னைத் தள்ளி வைப்பதாக றஞ்சி அன்பாக மிரட்டினார். நானும் அன்பாக விலகிக்கொண்டேன்.“ இதை வாசித்தபோது அதிர்ச்சியடைந்தேன். காரணம் இதில் சொல்லப்பட்டது அத்தனையும் பொய் என்பதுதான்.
1. ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ஊடறுவிற்கு கொடுக்கவில்லையென்பதால் பல முறை தொலைபேசியில் அவர் பிடித்த சண்டைகளை ... உடனுக்குடன் நான் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த நண்பர்களைத்தான் இப்போது சாட்சிக்கு அழைக்க முடியும்.அவர்களுக்கு அது இன்னமும் நினைவில் இருக்குமென்றே நான் நினைக்கின்றேன். நண்பர்களான என்.ஆத்மா, எம்.பௌசர், கவிஞர். சேரன், ஓட்டமாவடி அறபாத் ஆகியோர்களிடம், என்னுடைய தொகுப்பை கொண்டு வருவதற்கு முடிவு செய்வதற்கு முதல், இப் பிரச்சினைக்கான சில ஆலோசனைகளை பெற்றிருக்கிறேன். எனவே அவர்கள் இவ்விடயத்தை உறுதிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.
2. காலச்சுவடு கட்டுரை ஒன்றைக் கேட்டதன் நிமித்தமே, என்னுடைய அனுபவங்கள் சிலவற்றை அதனூடாகப் பகிர்ந்து கொண்டேன். எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து சுமார் 20 வருடங்கள் வரை சொல்வதற்கு பலவிடயங்கள் இருக்கின்றன. எனவே எதிர்வரும் காலங்களில் அவற்றைப்பற்றி அவ்வப்போது எழுத விரும்புகிறேன்.
ஊடறு றஞ்சி : அனார் பிரபல்யமான பதிப்பகங்களினூடாகத்தான் தனது கவிதைத் தொகுப்பைக் கொண்டு வரவேண்டும் என தம்மிடம் கூறியிருந்ததாக ஊடறுவின் சக தோழி ஆழியாள் கூறுகிறார் (அனார் ஆழியாளுக்கு எழுதிய கடிதம் இதற்குச் சாட்சி)
3. ஆழியாள் எப்போதும் என் மதிப்பிற்குரிய தோழி. எனவே றஞ்சி அவரை இவ்விடயத்தில் சேர்த்திழுப்பதில் எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. என்னுடைய கடிதங்கள் அவரிடமும், அவருடைய கடிதங்கள் என்னிடமும் நிறைய இருக்கின்றன. றஞ்சியின் தொடர்பிற்கு முன்பே ஆழியாள் மிக நெருக்கமான நண்பி. (பிரபலமான பதிப்பகங்களில் வெளிவரவேண்டும் என நாம் தீர்மானிப்பதில்லை. நம்முடைய எழுத்துக்கள் ஆழமானதாகவும், அர்த்த பூர்வமானதாகவும், அனுபவச் செறிவுள்ளதாகவும் இருந்தால்... அந்தப் பதிப்பகங்களின் வாசல் நமக்காகத் திறந்திருக்கும் )
ஊடறு றஞ்சி : ஒருவேளை அனாரின் காழ்ப்புணர்வு இங்கிருந்து தொடங்கியுமிருக்கலாம். 2007ம் ஆண்டு எம்மால் வெளியிடப்பட்ட மலையகப்பெண்களின் கவிதைத்தொகுபப்பான „இசைபிழியப்பட்ட வீணை“ இல் இடம்பெற்ற சூரியகலா என்ற மலையகக் கவிஞையின் கவிதை தன்னுடைய கவிதை வரிகளை கொண்டிருக்கின்றது என்று எம்முடன் வாதிட்டார். அந்தக் கவிதையில் வந்த வரிகள் தன்னுடைய கவிதை வரிகள் என குற்றம் சாட்டினார். அத் தொகுப்புக்காக கவிதைகளை ஊடறுவுக்கு சேகரித்து அனுப்பிய தோழர் வே. தினகரனுக்கும் அனார் தொலைபேசியில் இதுபற்றி முறையிட்டு விமர்சித்துள்ளார். ஆனால் அந்தக் கவிதை பற்றி நாம் ஆராய்ந்தபோது, மலையகக் கவிஞை சூரியகலா 2003 இல் அந்தக் கவிதையை எழுதி அது மலையகப் பத்திரிகையில் ஏற்கனவே வெளிவந்துவிட்டது என அறிந்தோம். இதை நாம் அனாருக்கு தெரியப்படுத்தியுமிருந்தோம். அனாரின் தொகுப்பு ‘ஓவியம் வரையாத தூரிகை’ 2005 இல் வெளிவந்திருந்தது. மலையகக் கவிஞை சூரியகலா தன்; கவிதையை 2003 இல் எழுதியிருக்கிறார் என நாம் அனாருக்கு அறிவித்த போது கோபமாக “அப்போ நான் பார்த்து எழுதியதாக நினைக்கின்றீர்களா?“ என எம்முடன் விசனம் கொண்டார்.
4. அம்பலப் படுதல்,, காழ்ப்புணர்வு, அவதூறு காரணமாக றஞ்சி அடையும் பதட்டம்... கையூட்டம் பெற்ற பொய்சாட்சியொருவர் நீதி மன்றத்தில் மிரட்சியுடன் முழித்து , முக்கி முனகுவதுபோல இருக்கிறது. தகவல் அறிவீனமும் பொய்மையும் ரஞ்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இரட்டைக் குழந்தைகள். றஞ்சியின் இந்த இயல்பை எண்ணி நான் ஆச்சரியப்படவில்லை. மலையகக் கவிஞைகளின் படைப்புகளைக் கொண்ட 'இசை பிழியப் பட்ட வீணை ' என்ற தொகுப்பு 2007 இல் வெளி வந்தது. 2004 இல் வெளிவந்த எனது “ஓவியம் வரையாத தூரிகை“ தொகுப்பிலிருந்து “ம(ர)ணப் பந்தல்“ என்ற எனது கவிதை (பக்கம் 22,23), ஜே. அன்னால் குளோரி என்பவரால் திருடப்பட்டு, அக்கவிதை “ம(ர)ண பந்தம்“ என்ற இன்னொரு தலைப்பில் அத்தொகுப்பில் மீண்டும் பிரசுரமாகியிருக்கிறது. 2002 ஆகஸ்ட் 12வது “எக்ஸில்“ இதழில் எனது “ம(ர)ணப் பந்தல் கவிதை“ முதன் முதலாக பிரசுரமாகியிருப்தை அனைவரும் அறிவார்கள். றஞ்சி இப்போது அதனை சூரியகலா எழுதியதாக ஞாபகப் பிசகுடன் குறிப்பிடுகிறார். “இசை பிழியப்பட்ட வீணை' தொகுதியில் சூரியகலா என்ற பெயர் எங்குமே இல்லை.. ஜே. அன்னால் குளோரி என்ற பெயர்தான் அங்கு இருக்கிறது. இந்தப் பெயர்களைக் கொண்டவர்கள் றஞ்சியின் அவதாரங்களா? நேர்மையின் உருவமான றஞ்சியிடம் இதுபற்றி, நியாயமான கோபத்துடன் 6 வருடங்களுக்கு முன்பு நான்கேள்வி எழுப்பிய போது மழுப்பல் நிறைந்த பொறுப்பற்ற பதிலை வெளிப் படுத்தினார். பெண்ணிய நோக்கில் இன்று வரை செயற்படுவதாகக் கருதப் படும் இவர் , சக பெண் படைப்பாளரான எனக்கு இத்தகையதோர் அநீதி நிகழ்ந்த போது எந்த நியாத்தையும் கூறாமல் வேடிக்கை பார்த்தார்.. ஒரு பதிப்பாளராக இருக்கும் றஞ்சிக்கும் , தொகுப்பாளரான தினகரனுக்கும் இது பற்றிக் கிஞ்சித்தும் கூச்சமோ,குற்றவுணர்வோ இல்லை.. அனாமதேயியான “ஜே. அன்னால் குளோரி“ என்ற இலக்கியத் திருடிக்கு வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே இலட்சியம். . என்னுடைய ஆதாரபூர்வமான கேள்விகளைக் கூடப் பொருட் படுத்தாமல் அந்த நபருக்காக என் நட்பையும் பலி கொடுத்தவர் றஞ்சி. இன்று கூசாமல் மறுபடியும் தன்னுடைய 'பொய்க் கடையை' இங்கே வந்து பரப்புகிறார். என்னுடன் பேசியதாகக் கூறிய அனைத்தையம் மறு தலிக்கிறார் .தொடர்ச்சியாக அவருக்கு சில ஆதாயங்கள் தேவைப்பாடுகள் இதன் பின்னணியில் இருக்கக் கூடும் .. இந்த விடயம் தொடர்பாக “இசை பிழியப்பட்ட வீணை“ தொகுப்பு அச்சாக்கத்துக்கு உதவி புரிந்த ஆத்மாவிடம் 6 வருடங்களுக்கு முன்பே முறையிட்டேன். எக்ஸில் விஜியிடமும் இது பற்றிப் பேசியிருக்கிறேன். இதை பெரிதுபடுத்த் வேண்டாம். சில பிழைகள் தொகுப்பில் நேர்ந்து விட்டன என ஆத்மா குறிப்பிட்ட்டார். தினகரனிடம் கதைத்போது உரியபதில் தருவதாக அப்பொழுது கூறினார். நல்ல வேளையாக இந்த மோசடியை அம்பலப் படுத்தும் ஓர் அரிய வாய்ப்பை இந்த றஞ்சியே ஏற்படுத்தித் தந்திருக்கிறார். அப்போதும் இப்போதும் நான் கூறுவது ஒன்றுதான்.... தூங்குவது போல் பாவனை செய்யும் தினகரனுக்கும், றஞ்சிக்கும் புரிந்தும் புரிய மறுப்பது வாசகர்களுக்குப் புரியும் என்று நம்புகின்றேன். ஆதாரபூர்வமாக இதை இப்போது வெளிப்படுத்தியிருக்கிறேன்.என்னை இலக்கு வைத்து ஊடறுவில் றஞ்சி அவ்வப்போது எடுக்கின்ற வாந்திகளை நான் கண்டுகொள்வதில்லை.அவற்றை நக்கிச் செல்ல அவர் வளர்த்த நாய்கள் இருக்கின்றன. ஒரேயடியாக றஞ்சி இப்போது உண்மையின் திருவுருவம் எடுக்க முனைந்தது அரசியல் நோக்கம் அற்றது, காழ்புணர்ச்சியற்றது, அவதூறுகளற்றது, பொறாமைக்கு அப்பாற் பட்டது என்றே எடுத்து கொள்கிறேன்.
5. றஞ்சியின் கண்டுபிடிப்பின் படி , சூரியகலா 2003 இல் எழுதிப் பிரசுரமாகியதாக சொல்லப் படுகின்ற அந்தக் கவிதை... என்னால் 2002 இல் எழுதி அதே ஆண்டு ஆகஸ்ட் மாத எக்ஸிலில் பிரசுரமாகியுள்ளது.
இசை பிழியப்பட்ட வீணை வெளி வந்த ஆண்டோ 2007. றஞ்சி குறிப்பிடுவது போல் அந்தக் கவிதை சூரியகலா என்ற பெயருடையவரால் எழுதப் பட்டதுமல்ல. திடீரெனத் தோன்றிய ஜே. அன்னால் குளோரி என்ற 'இலக்கிய மாய மோகினி' திருடி வெளியிட்ட கவிதை அது. 2004 இல் வெளி வந்த என்னுடைய முதல் நூலை 2005 இல் வெளி வந்தது என்ற தகவல் திரிபு வேறு. இந்தக் தகவலைக்கூட சரி,பிழை பார்க்கத் தெரியாத றஞ்சி.. தன் மேல் நான் காழ்ப்புணர்வுடன் இருப்பதாக கனவு காண்கிறார். றஞ்சியைப்போல் எனக்கு அரசியல் தேவைகள் இல்லை. பொய் கூறுவது நானா ,நீங்களா? உங்களுக்கு மேலும் நடக்க முடியவில்லையா , பரவாயில்லை. காலாற அமருங்கள். அதற்காகப் பயணிகளைத் தடுத்து தொந்தரவு செய்யாதீர்கள்.
ஊடறு றஞ்சி : சேரனிடம் முகவுரை வாங்கினால் ஊடறு அனாரின் தொகுப்பை கொண்டுவராது என்று கட்டளை (?) இட்டதாக சொல்வதும் முழுப்பொய். இன்னும் மேலே போய் இந்தக் கட்டளையை மீறினால் (?) ஊடறு தள்ளிவைக்கும்(?) என புனைந்து ஒரு அவதூறையே செய்திருக்கிறார். நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஊடறுவை சேரனுக்கு எதிராய் நிறுத்தும் மலிவான நோக்கம் தனது தொகுப்பை காலச்சுவட்டினூடாக வெளிக்கொணரத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. உண்மையில் 2008 இல் அனாரின் ‘எனக்குக் கவிதை முகம்’ கவிதைத் தொகுப்பு வெளிவந்த பிறகே அதற்கான முகவுரையை சேரன் எழுதியிருந்தது எமக்குத் தெரியும்.
6. 2007 இல் எனது 2வது கவிதைத்தொகுதி “எனக்கு கவிதை முகம்“ வெளிவந்திருக்கிறது. ஆனால் அவர் குறிப்பிடுகிறார், 2008இல் நூல் வெளிவந்த பினர்தான் சேரன் முன்னுரை எழுதியதாக. றஞ்சிக்குத் தெரிந்த இவ்விடயம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் முன்னுரை பெற்றதன் பின்னர்தான் நூலை வெளியிடுவார்கள். இது எப்படிச் சாத்தியம்.....?? இது என்னவிதமான கண்டுபிடிப்பு..?
7. ஊடறுவிற்கு கொடுத்த எல்லா ஆக்கங்களும், அவரிடமிருந்து கவிதைகளோ.. பிற ஆக்கங்களோ.. கேட்டு கடிதங்கள் வந்த பிறகே நான் அனுப்பியவையாகும்.
(கவிதைகள் பிரசுரமான ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஜே. அன்னால் குளோரி - என்பவரின் பெயரி்ல் என்னுடைய கவிதை இடம்பெற்ற புத்தகம் இது (இசை பிழியப்பட்ட வீணை).
2 comments:
ஓட்டமாவடி அறபாத் :
அனாரின் மீது அபாண்டம் சுமத்தியுள்ள ரஞ்சியின் அபத்தம் ஆச்சரியமாகவுள்ளது.படைப்பாளிகளின் பின்புலத்தில் பல முகங்களை கண்டவன் நான்.இது ஆபத்தான அகழி.இதை ரஞ்சி தோண்டியிருக்கக்கூடாது. ஏனெனில் அதற்குள் விழுந்து கொண்டிருப்பதைப்பார்க்கின்றேன்.அனாரின் எழுத்துக்கு சரியான பதிலை தர வேண்டும் என சிலர் கோரிக்கை விட்டிருக்கின்றனர்.சரியான ஆளிடம்தான் சரியை எதிர்பார்க்கலாம்.ஒரு வேளை அனாரின் மீது இன்னும் சில அபாண்டங்களை கட்டவிழ்த்து விடலாம்.நான் அறிந்தவரை அனார் யாரின் கவிதையையும் நகலெடுத்து எழுதுபவரல்ல.அனாரின் கவிதைகளை நகலெடுத்து சிலர் கவிதை எழுதுவதை வரிக்கு வரி நான் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.உண்மையை சொல்வதற்குப்பயப்பட்டாலும் ஒருவர் உண்மையை சொல்லும் போது மௌனமாக இருப்பதும் வன்முறையே.அதனால்தான் அனார் சொல்லும் வார்த்தைகள் அத்தனையையும் உண்மை.அவர்பினை வெளிக்கொணர்வதற்கு முன் நண்பர்களிடம் ஆலோசனை பெறுவது அவரின் இயல்பு அவ்வாறே ரஞ்சியினுடைய தொடர்புகளையும் அக்காலத்தில் அபிப்பிரயமாக கேட்டிருக்கின்றார்.அதற்கு அனார் எடுத்த முடிவினை நாங்கள் நல்லதென்று ஊக்கப்படுத்தியிருந்தது நினைவில் நிற்கிறது. சக எழுத்தாளர்களை கௌரவிக்கும் மனப்பாங்கு வரும்வரை நம் எழுத்துக்கள் வெறும் காட்டில் எறித்த நிலாதான்.
Poet. Cheran Rudhramoorthy :
அனாரின் கவிதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதியவன் என்ற வகையில் சில விடயங்களைத் தெளிவு படுத்தவேண்டும் என்பது எனது அறம் சார்ந்த கடமை. தன்னுடைய கவிதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதும்படி அனார் என்னைக் கேட்டபோது நான் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டேன். முன்னுரையும் எழுதி அனுப்பினேன். இது நடந்தது 2007. பின்னர் அனார் என்னைத் தொடர்பு கொண்டு பேசியபோது நூலை வெளியிட முன்வந்த ஊடறு அமைப்பினர் என்னுடைய முன்னுரையுடன் நூல் வருவதை விரும்பவில்லை எனவும் தான் என்ன முடிவு எடுப்பது எனும் சங்கடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். "என்னுடைய முன்னுரை இடம்பெறவேண்டும் என்கிற எந்தக் கட்டாயமும் இல்லை. நீங்கள் விரும்பினால் முன்னுரை இல்லாமலே வெளியிடலாம். எனக்கு எத்தகைய மனத்தாங்கலும் இல்லை" என அவரிடம் தெரிவித்தேன்.கூடவே "யார் முன்னுரை எழுதுவது என்பதைக் கவிஞர்தான் தீர்மானிக்க வேண்டும், வெளியிடுபவர் அல்ல. எனவே நூல் வெளியே வரவேண்டும் என்பதற்காக உரிமையை விட்டுக் கொடுப்பதா இல்லையா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்" என்றும் சொன்னேன் .பிற்பாடு, ஊடறு மூலம் நூல் வெளியேவராதபடியால் காலச்சுவடு பதிப்பகத்தூடாக நூல் வெளியாயிற்று.
Post a Comment