Friday, 4 March 2016

வாப்பா
-------------------------------------------------------------------------------------


 - அனார்

திண்ணையில் குட்டிச் சுவருக்கும் தூணுக்கும் நடுவில் வாப்பாவின் சாய்மனைக் கதிரை போடப்பட்டிருக்கும். அவரின் இடப்பக்கமாக வாசலும் அதற்கு நேரே சிறிது தூரம்விட்டு வெளிக்கடப்பும் அதற்கங்கால் பலாமர வளவு இருந்தது. வலப்பக்கம் கைதொடும் பக்கமாக வீட்டுக்குரிய முன்கதவு அமைந்திருந்தது. மரியாதைக்கும் மகத்துவத்துக்குமான கதவு. கதவு நிலையில் ஷானாஸ் மன்சில் என்று நீள் சதுரமான கறுப்பு நிற பிளாஸ்டிக் சிலேடில் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அந்தவீடே அந்தப் பெயருக்காகத்தான் கட்டப்பட்டதுபோல அந்த எழுத்துக்கள்தான் வீட்டைத் தாங்கும் மாயக்கற்களைப்போல ஒவ்வொரு எழுத்துக்களிலிருந்தும் அபரிமிதமான ஆசீர்வதிக்கப்பட்ட ஓர் பெண்மையின் தெய்வீக வாசனை ஒளி வீடெல்லாம் வீசி மணக்கத்தான் செய்தது. அதன் பிரகாசம் மிகுந்த வாசனை சாய்மனைக் கைகள் வைக்கும் நீண்ட பலகையிலும் புத்தகங்கள் அடைத்து நிரம்பிய சிறிய மர அலுமாரியின் கீழ்த்தட்டில் ஒழித்து வைத்திருக்கும் சிவப்புநிற அட்டைபோட்ட கனமான புத்தகத்தின் நடுப்பக்க ஓவியங்களிலும் உள் வீட்டு ஸ்பிறிங் மெத்தை போட்ட கட்டிலிலும் மெத்தையின் நடுவில் பொத்தல் விழுந்து பஞ்சு விலகி துருத்தியபடி இருக்கும் கரள்பிடித்த ஸ்பிறிங் இரும்பு வளையங்களிலும் இரண்டு குருவிகள் கொஞ்சியபடி பூக்களுக்கு மத்தியில் மரத்தின் பாதிக் கிளையில் அசையாமல் நிற்கிற தலையணைகளிலும் கைகளில் வியர்வைபட்டு கறுப்புமங்கிய பழைய தையல் மெசினின் லாட்சுகளுக்குள்ளும் பச்சையும் மஞ்சளும் வெள்ளையும் நீலமுமான நூல்கட்டைகள் ஊக்குகளோடு பின்னிக் கொண்டிருக்கும் இஞ்நாடாவின் மில்லிமீற்றர், சென்ரிமீற்றர்களோடும் கலந்திருந்தது. உண்மையில் குசினியின் கொள்ளி அடுப்பு கரிபிடித்த மண் சட்டிகள் புளித்த பூஞ்சனை ஊசல் நாத்தத்தோடு இருக்கும் தேயிலை ஊத்தும் மரமேசை கரப்பத்தான் பூச்சு மொய்க்கும் சீனிப்போத்தல், தண்ணிக்குடம், ரோசாப்பூ போட்ட தட்டைப் பீங்கான், அம்மிக்கல், கிணற்றடி, தேசிமரம் அனைத்திலும் அவளின் வாசனை அதிகாரபூர்வமாக ஆட்சி செய்தது. அந்த வீடும் அந்த வீட்டின் எந்தப் பொருட்களும் அப்பெயரின் எழுத்துக்களின் அனுமதியில்லாமல் அங்கிங்கு அசைவதில்லை. வீடே அதன் உரிமைகளை அவளுக்குத் தாரை வார்த்த ஆனந்தத்தில் இருந்தது. விசுவாசமான வீடு, விசுவாசமான கண்ணாடியிலைப் பூக்கன்றுகள், விசுவாசமான வெக்கம்கெட்ட ரோசாச் செடி, மிகவும் விசுவசாம்.. .. 


வாப்பா ஸ்கூல் விட்டு வந்து பகல் சாப்பிட்டு முடித்த பிறகு அவருடைய சாய்மனையில்தான் தூங்குவார். சில நேரங்களில்த்தான் தூங்குவார். பல சமயங்களில் தூங்குவதாக நாங்கள் நம்ப வேண்டுமென தூங்குவதுபோல ஒரு நடிப்பு நடிப்பார். கண்டிப்பான கறாரான ஆசிரியர். நித்திரைக் கண்ணிலும் கண்டிப்பும் கறாரும். மிக அழகான தேர்ந்த நடிப்பு. அவருடைய ஓரங்க நாடகம் முழுக்க பல்லைக் காட்டியபடி சந்தேகமும் குற்றப் புலனாய்வின் தந்திரமும் எங்களைப் பார்த்து சவால்விடும். முகத்தில் கண்களைப் பாதி மூடி நான்கு விரல்களால் மறைத்துக்கொண்டு பெருவிரலை நாடியில் பதித்திருப்பார். இந்த வீட்டில் நம்முடைய ஆட்சி சரியாக நடக்கின்றதா அவருடைய காவல் எவ்வளவு தூரம் இன்றியமையாதது. அவருடைய சட்டதிட்டங்கள் யாரால் பேணப்படுகின்றன யாரால் மீறப்படுகின்றன என்ற கணக்கெடுப்பும் இருக்கும். முக்கியமாக முன் கதவால் வெளியிலிருந்து யாரும் வீட்டினுள்ளே போகமுடியாது. உள்ளே இருப்பவர்கள் வெளியே போக முடியாது. கால்களை நீட்டி படுத்திருப்பார். எங்களை விட்டுப்பிடிக்கும் பாவனையோடு கண்களை மூடிய அவர் கைவிரல்களிலிருந்து கடியன்களைப்போல இறங்கி வந்து அவரது அசைவுகள் எல்லாமும் எங்களைக் கடிக்கும். கிட்டத்தட்ட ஒரு போலீஸ் மோப்ப நித்திரை அது. வாப்பா நன்றாக தூங்கினார் என்றால். எட்டுக்கட்டைக்கு அங்கால் கேட்கும் அவரது குறட்டைச்சத்தம். அவருடையது மாத்திரமேயான ஸ்பெஷல் குறட்டை. 


ஏஏ.. ஹே.. என குறட்டையின் முடிவில் ஒரு ஹம்மிங் போடுவார். அப்போது நினைத்துக் கொள்ள வேண்டியது. இந்த உலகத்தில் அவர் இல்லை. குதிரையை தட்டிவிட்டுவிட்டார். இனி அது அவரையும் இழுத்துக்கொண்டு தறிகெட்டு ஓடப்போகின்றது. அவரும் ஏஏ.. ஹே.. என ஓடப்போகின்றார். இந்த முக்கியமான கட்டத்திற்காகத்தான் நாங்கள் அனைவரும் காத்திருப்போம். அவருடைய காவலில் இருந்து வாசல் வழியால் நழுவி வளவையும் தாண்டி வீதிக்குவந்து ஒரே ஓட்டமாக தாமரைக்குளத்துக்குள் வந்து சேர்ந்துவிடுவோம். உம்மாவும் இந்த நேரத்தில்தான் அன்று போட்டிருந்த அவருடைய சேட் கொழுவியிருக்கும் எட்டாத மான்கொம்பு ஹெங்கரை எட்டி எட்டி கையைவிட்டு பொக்கட்டில் இருக்கும் கஜானாவில் கைவைப்பார். எப்படியும் உம்மா என்கிற மகா கள்ளி தப்பித்து விடுவாள். நாங்கள் பார்ப்பது பற்றி கொஞ்சமும் அஞ்சமாட்டாள். நாங்கள் யாரும் இந்தப் பகல் கொள்ளையை காட்டிக் கொடுக்க நினைத்ததுமில்லை.


மன்சில் இல்லாத அந்த வெறும் ஷானாசான அவள் இந்நேரம் கதைப்புத்தகங்களோடும் குட்டி ரேடியோவுடனும் முத்தமிடும் குருவிகளுக்கு மேலே கன்னத்தைப் புதைத்துக்கொண்டு பாடல்களை கேட்டவாறு குறிப்பாக கமல்ஹாசனின் பாடல்கள் வரும்போது நடிகைக்குப் பதிலாக அவளை நினைத்துச் சிரித்துக் கொண்டு புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவாள். அவளது கையில் இருக்கும் சாண்டிலியனுக்கும் வெட்கமில்லை. கால்களைப் பின்னி நீட்டிப் போட்டு ஆட்டும் அவளுக்கும் வெட்கமில்லை. குட்டி ரேடியோவுக்கும் வெட்கமில்லை என அவள் அசையும் பொழுதெல்லாம் மெத்தையின் ஸ்பிறிங்கள் கற மறவென பொரிந்து தள்ளின. இந்தக் கூத்து முழுவதையும் பார்த்துப் பார்த்துப் பொறுக்காமல் வெயில் விரைவில் மங்கிவிடும். அந்தி வாடி செவ்விரத்தம் பூப்போல விழும் சாம்பல் கறுப்பாக. அவள் சமைத்த சுரக்காய்ச் சுண்டலின் சட்டிக்குக் கீழே சாம்பலோடு சாம்பலாக.


வாப்பாவின் சேர்ட் பொக்கற்றில் கைவைக்கும் துணிச்சலான விரல்களையுடைய வீரப்பெண். இப்போது அகப்பைக் கணையால் சாயமூட்டப்பட்ட பன்களை வாட்டி எடுக்கிறாள். உப்பிய பன்கள் அவள் கையில் பட்டு மென்மையாகித் தளர்ந்து என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என வளைந்து கொடுக்கிறது. வித்தைக்காரியின் விரல்களில் ஓவியங்களாக மள மளவென்று விரியும் பாய்கள் புள்ளிகளும் கோடுகளும் கட்டங்களும் என அவள் பாய்களில் வரையும் கலவை இதுவரை யாரும் கண்டுகொண்டதே இல்லை. அவளது திருட்டுத் தனங்களை அங்கேதான் மறைத்து வைக்கின்றாள். ஆணும் பெண்ணுமாக குழந்தைகளையும் உருவாக்கியவள்.


யார் அதிகமாக குழந்தைகளைப் பெறுகிறார்களோ, அவர்களே சிறந்த மனைவி, மிகச்சிறந்த பெண்மணி என்று கூறுபவள்.


// தீன்குலக் கண்ணு
நல்ல திருமறைப் பெண்ணு
மான்புகளைக் காத்து நிற்கும்
மஹ்ஷரின் கண்ணு.... //


எனப் பாடவும் செய்வாள். ஒரு பெண்ணுக்கு பத்தொன்பது வயதில் திருமணமாகி அடுத்த வருடம் ஒரு குழந்தையை பெற்றுவிடுவது என்றால் சும்மாவா? அதற்கடுத்த வருடம் மற்றொன்றும், அடுத்து இன்னொன்றும், அடுத்தடுத்துமாகவும் பிள்ளைகளை பெற்றுத் தள்ளியவள். கிணற்றில் வாளியிட்டு தண்ணீர் அள்ளி, கோடரியால் வீரமரத்தின் கட்டைகளை கொள்ளிகளாகப் பிளந்து, மூட்டை மூட்டையாக நெல் அவித்து அரிசாகக் குற்றி அதை மலை மலையாக சுளகால் புடைத்தெடுத்து, மீன் கறியும், புட்டும் சுட்டுக்கொடுத்து, மீனின் தலையும், சொக்கும், வாலும், வயிற்றுப்பாடுமென வேறாக கணவனுக்கு எனப் பிரித்து, பொன்னெழுத்துக் கோப்பைக்குள் வைப்பவள். ரோசக்காரியின் சுருட்டை முடியும், அவளின் வாயிலிருந்து நெருப்பு தெறிக்கும் வார்த்தைகளும் யாருக்கும் பணிந்ததில்லை. அவள் சொல்வதுபோல இதுவெல்லாம் அவளால்த்தான் முடியும், அவளால் மாத்திரம்.


வாப்பா இரவுச் சாப்பாட்டை முடித்ததும் சாய்மனைக் கதிரையில் இருந்தபடி சிகரெட்டை பற்றவைப்பார். அது ஒரு மந்திரச் சொல்லைப்போல். ஒளிர்ந்து மறைந்ததும் பாடத் தொடங்குவார். முதலில் எப்போதும் ஒரே பாடலைத்தான் பாட ஆரம்பிப்பார். துள்ள வைக்கும் தாளம், மிடுக்கும் கம்பீரமுமாக குரலை கனைத்துத் தொடங்குவார்.


அல்ஹம்துலிமன் அஸ்ஸபமன் ஜல்ல ஜலாலா.. திருப்பியும் அல்ஹம்துலிமன் அஸ்ஸபமன் ஜல்ல ஜலாலா.. அதுக்குப் பிறகு அவருக்கு வார்த்தைகள் வராது. அதிகமாய் மறந்துபோன ஆனால் கொஞ்சம் மறக்கவும் முடியாமல்போன பாட்டு அது.


த.. ல்லல லலா லல்ல லலா லல்லல லா லா


நாங்கள் மொத்தமாகச் சிரிப்போம். உடனயே எங்களில் யாரையாவது ஓடிவந்து எட்டிப்பிடிக்கும் வாப்பாவின் கைகளுக்குள் மாட்டிக் கொள்வோம். எவ்வளவு திமிறினாலும் வெளியே வரமுடியாது.


சிரிக்கிறியா நீ கள்ளபடுவா என்பார். அவருடைய கறுத்த முலைக்காம்பில் எங்கள் வாய்படும்படி பிடித்து நசுக்குவார். வாய்பட்டுவிட்டால் நாங்கள் தோற்றுவிட்டோம். வாயைக் கொண்டுபோகவிடாமல் தடுத்து தப்பினோம் என்றால் அவர் தோற்றுவிட்டார். இது ஒரு கசமுசாவான கொஞ்சம் வெட்கக்கேடான ஆனால் அலாதியான விளையாட்டுத்தான். இன்று அவர் தோற்றுவிட்டார். எனவே ரேடியோ எங்கள் கைகளுக்குச் சொந்தம். நாங்கள் அவரைக் கைப்பற்றி விட்டோம். வாப்பா சாய்மனையில் படுத்திருந்தார். இருபுறமும் கதிரையின் நீண்ட கைகளில் நாங்கள் சுற்றி அமர்ந்து கொண்டோம். ரேடியோவைப் போடவா ரெடியா என்று எல்லோருமே கேட்டார்கள். ஆ.. ரெடி. பார்த்து நோகாம போடணும் என்றார். முறைப்படி அவருடைய வலது பக்கம் நாவற்பழம்போல கறுத்த முலையை திருகிவிட்டான் தம்பி. ரேடியோ பாடத் தொடங்கியது. என்னடி றாக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி. சின்னக் கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் சிவப்பு மச்சானை இழுக்குதடி. அஞ்சாறுரூபாய்க்கு மணிமால எனும்போது அடுத்த பக்க நாவற்பழத்தை திருகிவிட்டான். ரேடியோ பாடுவதை நிறுத்திவிட்டது. மற்றவரின் முறைக்கு ரேடியோவை முறுக்கிவிட்டார்கள். ஓ.. நோகுது மெதுவாப் போடுங்க பத்திரமா கவனமா இல்லாட்டி பாடாது என்ற ரேடியோ அடுத்ததாக கவி பாடியது..


// குஞ்சுமுகமும் 
கூர்விழுந்த முக்காடும் 
நெத்தி இளம்பிறையும் 
என் நித்திரையில் தோணுதுகா //


// ஆதங்காக்கா ஆதங்காக்கா
அவரைக் கண்டால் சொல்லிடுகா
மாதுளங்கன்னி 
மடல்விரிஞ்சி போச்சுதென்று //


எல்லாவிதமான சமரசங்களுடனும் ரேடியோ ஒவ்வொரு பாட்டாகப் பாடியது.


கா.. கா.. ஆகாரம் உண்ண எல்லாரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க சிவாஜியின் பாட்டுத்தான் அதிகமாகப் பாடியது. நாங்கள் அலுப்புற்று நிறுத்தும்வரை ரேடியோ பாடிக்கொண்டிருந்தது.


வாப்பா என்னும் காகத்தைச் சுற்றி நின்று பிள்ளைக் காகங்கள் கத்தின. கா.. கா.. கா.. எங்களுக்கெல்லாம் ஒருநாள் திடீரென வெட்கம் ரோசமெல்லாம் பொத்துக் கொண்டுவந்தது. அதன் பிறகு பருவமடைந்த எங்கள் மானமுள்ள விரல்களால் நாங்கள் யாரும் முடுக்கிவிடாமலே தானாகப் பாடிக் கொண்டிருந்தது.


அதே அல்ஹம்துலிமன் அஸ்ஸபமன் ஜல்ல ஜலாலா.. திருப்பியும் அல்ஹம்துலிமன் அஸ்ஸபமன் ஜல்ல ஜலாலா.. 


த.. ல்லல லலா லல்ல லலா லல்லல லா லா 


பாடியதாலே வயதுபோன வயதபோனதாலேயே பாடமுடியாமல் பழுதாய்ப்போன எங்கள் ரேடியோ விட்டுவிட்டு கற கறத்து இரைச்சல் கூடி தெளிவற்று முணுமுணுத்தது. இரைச்சலோடு வரும் பாடலை கேட்பதற்கு எவருக்கும் நேரமில்லை. கடைசி நாட்கள் வந்தவிட்டதைப்போல வெறுமனே வெறித்துப் பார்த்தபடி பொழுதுகள் சாயும்வரை மௌனமாய்க்கிடந்தது. மௌனம் சிகரெட்டின் தணல்போல புகைந்து கனன்று கொண்டிருந்தது. அதுதான் மீதம் இருக்கும் ஒரேயொரு வார்த்தை போலவும் ஏற்கனவே சொன்ன ஒன்றின் ஞாபகம் போலவும் சொல்லத்தவறியதன் ஏக்கமாகவும் சொல்ல விரும்பிய ஏதோ ஒன்றாகவும் அடுத்தடுத்து சிகரெட்டுக்கள் பற்றி எரிந்து சாம்பலாகின.


உயிர் நெருப்பு சிகரட்டின் தொங்கலுக்கு பதுங்கி பதுங்கி வந்து கொண்டிருந்தது.

-------------------------------------------------------------------------------------------------

நன்றி காலச்சுவடு இதழ் 195, மார்ச் 2016

No comments: