Monday, 25 July 2016


இன்ஸாபின் ‘ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை’ : வாழ்விற்கான தேடல்கள் பற்றிய அவதானிப்பு : -

- அனார்
------------------------------------------------------------------------------------------------------------





இன்ஸாப் அவர்களின் “ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை” நூலைப் புரட்டும்போது,‘மரணம் ஒரு பக்கத்து நண்பன்’ – என்ற தலைப்பு முதலாவதாக என் கண்களை மோதியது. எனக்குள்ளாகவே கூர்மையான ஒரு மின்னல் வெட்டிச் சென்றது. மரணத்தை நிகழ்த்துவதற்காக திட்டமிடக்கூடிய மனதிடம் இருந்த கவிதைத்துயர், அதை மூடிக் கவிந்திருக்கும் நினைவின் கருமையைத்தான் அம்மின்னல் வெட்டி மறைந்தது.



சிலவேளைகளில், அவசரப்பட்டு பிறந்துவிட்டோமா? என நினைப்பதுண்டு. மரணம்பற்றி விசித்திரமான கற்பனைகளும், அளவற்ற ஈர்ப்பும், அதன் மேலான தூய வாஞ்சையும் எப்போதுமே எனக்குள்ளது. அது ஒரு மாறாத விதி என்ற முடிவுக்கும் அப்பால், மிக கனவுபூர்வமான எண்ணங்கள் என்னுள்ளே தோன்றுவதுண்டு.

“என் பெயர் சிவப்பு” நாவலில் ஒரான்பாமூக், எனிஸ்டே என்பவரின் மரணம் நிகழும் கணங்களை, மரணித்துப்பார்த்துப், பின்னர் எழுதியதுபோல உன்னிப்பாக விபரித்திருப்பார். அவ்வளவு அழகான உயிர் பிரிதலை, நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. அவ்விதாமன அனுபவத்தை ஒருவர் அடைந்து பார்ப்பதற்கு ஆசைப்படுமளவு கலாபூர்வமான மரணம்.

இந்த நூலில் மரணத்தினதும் வாழ்க்கையினதும் நினைவுகள் மாறி மாறி சொல்லப்படுகின்றன. இன்ஸாபிற்கு, குழப்பங்கள் இல்லாத இளமை வாய்த்திருப்பதும், தீர்க்கமான நோக்கமும், தெளிவான சிந்தனையைக் கொண்டிருப்பதும், கனவு கண்டபடியே இருக்கும் குழந்தையின் கண்களைப்போல தன்னுடைய உள்ளத்தை அவர் கையாள்வதையும்தான் நான் வியக்கிறேன்.

இந்நூலை எழுதுவதற்கு இறைமீதான அசையாத நம்பிக்கை, சமூதாயப்பற்று, தெளிந்த அறிவு அவருக்கு பக்கபலமானதாக இருந்திருக்கிறது. அதனால்தான் வாழ்க்கை மீதான நிர்மலமான புரிதலை கொண்டிருப்பவராக தன்னை வெளிப்படுத்துகிறார்.

“எவ்வளவுதான் திரும்பிப்பார்த்தாலும், மரணம் ஒரு சொட்டாவது தெரிவதில்லை. நம் நிழல்களுக்குள் பிணைந்து, அது சதாவும் நம்மைத் துரத்துகிறது. எம் எல்லாத் தெருக்களிலும் நம்மோடு சேர்ந்து அதுவும் சமாந்தரமாய் நடக்கிறது“ (மரணம் ஒரு பக்கத்து நண்பன்) என்று இன்ஸாப் குறிப்பிடுகிறார். மற்றொரு கட்டுரையில், “தனக்கு எல்லா வசதிகளும் வந்த பிறகு, மிகச்சிறந்ததொரு வாழ்க்கையை வாழலாம். இறைவனை திருப்திப்படுத்தலாம் என்றுதான் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அப்படி வாழ இந்த உலகில் வாழ்க்கை எவருக்கும் எஞ்சுவதில்லை. சொல்லி முடியும்போது வார்த்தை முடிந்துபோவதுபோலத்தான், வாழ்க்கையும்”என்றெழுதுகிறார். அறிவுரைகளுக்கும், தத்துவங்களுக்கும் நடுவில் நின்று திணறாமல், உணர்வுபூர்வமாக சிறுகதைகளின் சாயல்களை அவருடைய எழுத்துக்கள் நெருங்குகின்றன. வாசிப்பதற்கான விருப்பத்தை அது ஏற்படுத்துகின்றது.

“பயணங்களின்போது ஜன்னலோர இருக்கை இதமானது. வாழ்க்கையைப்போல எல்லாமே வேகமாக நகரும். பலவருடங்கள் பயணத்தில் கரைந்திருக்கிறது வாழ்வு. தனிமையில் தொடரும் பயணத்தில், வாகனச்சத்தமும் மௌனமும் தான், கடைசிவரை ஒலித்துக்கொண்டிருக்கும். பல மணித்தியாலங்கள் மௌனத்தில் இருப்பதென்பது வேதனை நிறைந்த ஒன்று. அப்போதெல்லாம் நினைவுகள் அதன் பாட்டிற்கு அலைந்து கொண்டிருக்கும். மலைகள், ஆறுகள், மரங்கள், நுரைக்கும் அலைகள், வெவ்வேறு முகங்கள் எனத் திரும்பத் திரும்ப வந்துபோகும் ஒரே காட்சிகள். இறைவன் இவற்றையெல்லாம் வீணாகப் படைக்கவில்லை என்ற குர்ஆன் வசனம் அப்போதெல்லாம் மனத்தில் வந்துபோகும். போர்ச்சூழல் மிகுந்த பீதியை உண்டு பண்ணியிருந்தபோது, கொழும்பு வீதிகளில் அச்சம் சூழ்ந்து கொண்டிருந்தது. எங்கும் குண்டு வெடிக்கலாம் என்ற எச்சரிக்கை ஒரு புது அனுபவத்தை உண்டுபண்ணியது. ரயிலின் அறைகள் முழுவதும் ஒரு வகை மரண ஓசை காதில் கேட்பதுபோன்று இருக்கிறது. அந்த நேரத்தில் நம்பக்கதில் குண்டொன்று வெடித்தால் எப்படி இருக்குமென மனது நினைத்துப் பார்க்கும்“.(அந்திபடும் நினைவுகள்)

வாழ்க்கையைப் பற்றி எழுதும்போது, அது மரணத்தைக் குறித்து நிற்கிறது. மரணத்தைப் பற்றி எழுதும்போது வாழ்வைப்பற்றியதாக தோன்றுகிறது. அத்தோடு குழந்தைகள், இளமை, முதுமை, இலட்சியம், இஸ்லாமிய வாழ்வுநெறிகளைப் பேணத்தூண்டுதல், இயற்கையினை சிலாகிப்பது, இறைவனை உணர்வது, குற்றமற்ற சமூதாயத்திற்கான கனவு, காலம், மனிதன், உள்ளம், நன்மை, தீமை, நரகம், சுவர்க்கம் என்கின்ற அம்சங்களில், தன்னுடைய எண்ணங்களின் போக்கில் எழுதியிருக்கிறார். எங்களுடைய சமூதாயத்தில் மேம்படுவதற்கும், உணர்த்துவதற்கும் இன்னுமின்னும் பலவிடயங்கள் இருக்கின்றன. அவற்றையும் இன்ஸாப் எழுதவேண்டும். மதத்தின் வரையறைகளுக்குள் நின்று தனக்குச் சாத்தியமான வகையில் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்.

இறைவனைப் புரிந்து வைத்திருப்பதன் ஆன்மீக நெருக்கம், அவரை மென்மையான மிதக்கும் மேகத்தைப்போல ஆக்கியிருக்கிறது. உளத்தூய்மையே அவரது தேடல். தன் சமூகத்தை நேர்மையாக முன்வைக்கும் பக்குவம், பிறசமூகத்தை அரவணைக்கும் நியாயம், தான் அனைத்துக்கும் மேலாக மனிதன் என்கின்ற பெருமிதம் அனைத்தையுமே தனக்கான கருணையின் சொற்களைக்கொண்டு இந்நூலை நிறைத்திருக்கிறார். அவருடைய சிந்தனைகளின் இலக்கு உள்ளொளியின் தேடலாகும். எதிர்காலத்தின் சமூக மேம்பாட்டுக்கான சக்தியாக, அவர் எழுத்துக்களை மேலும் வலுவாக முன்னிறுத்தக்கூடும். அவரிடம் உள்ள கலைமனம், உறுதியானதொரு சமூகச் செயற்தளத்தில் ஓர்மையுடன் முன்தள்ளலாம்.

இன்சாப் இளைஞராக இருப்பதினால் இளைஞர்களுடைய சமூகச் சிந்தனைகளில் தாக்கம் செலுத்தக்கூடிய அணுகுமுறையை கையாண்டிருக்கிறார். கவிதை, இசை, தற்கால இலக்கியத்தின் மீது அவரது ஈடுபாடுகளும் வெளிப்படுகின்றன. புரியவைப்பதற்கான உரையாடல்களாக இந்நூலின் உரைநடைகளை அமைத்திருக்கிறார். ஜாமியா நளீமியாவில் பயின்று வெளியானவர். இன்றுள்ள பல்வேறுபட்ட மதம் அரசியல் வாழ்க்கை கலை போன்றவைகளால் உருவாகும் சவால்கள் பற்றி தனது படைப்புக்களின் ஊடாக அவர் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பை நன்குணர்ந்துள்ளார்.

நாம் வாழும் இந்த உலகம் பன்மைக் கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் கொண்டதாகும். ஒருவர் இன்னொருவரைப் புரியவும், விட்டுக்கொடுக்கவும், பழகுவதற்கு முதலில் வாழ்க்கையை புரியவேண்டியிருக்கிறது. நம் அன்றாட வாழ்வின் அவசரங்களில் வாழ்வு குறித்த பல உண்மைகளை மறந்துவிடுகிறோம். அந்த உண்மைகளை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இத்தொகுப்பின் எழுத்துக்களை எடுத்துக்கொள்ள முடியும் என்று தன்னுரையில் இன்ஸாப் தெரிவிக்கிறார். அவருடைய மாபெரும் மானுடக்கனவுகள் சாத்தியப்பட வேண்டும்மென்பதே என்னுடைய விருப்பமுமாகும்.

No comments: