ஜின்னின் இரு தோகை - அனார்
--------------------------------------------------------------------------------------------------------
'மரத்தின் இடைவெளிக்கூடாக விழுந்த
இறந்தகால வெட்கங்களின்
வெளிச்சத் தீற்றல்களைத்
திரும்ப நினைத்து நாணமுறுகிறேன்
..
கற்களின் இடுக்குகளுக்குள்ளே
தாப திவலைகளின்
நீர் வளையங்களாகிறேன்.
உன் கண்கள் ரகசியங்களுடன்
சுழலும் பொழுதெல்லாம்
இரவின் சதுப்பு நாணல்களுக்குள்
புதைகின்றன நட்சத்திரங்கள்.'
'பல்லாயிரம் உப்புக்கோடுகளாக
மழைக்கொட்டும் தனித்த இரவொன்றில்
கண்களில் இருந்து பெருகும்
உப்புக்கோடுகளை
வெளிப்படாமல் அழிக்கிறாள்..'
'மௌனத்திற்கும் உரையாடலுக்குமிடையே
பெறப்படாத முத்தங்கள்
நம் கண்கள்'
----------------------------------------------------------------------
Muthuprakash Ravindran ( Chennai, India)
--------------------------------------------------------------------------------------------------------
தமிழில் தற்சமயம் எழுதும் கவிஞர்களில் அனார் மற்றும் தேன் மொழி தாஸ் மட்டுமே சிறந்த கவிஞர்கள் என்பது என் கருத்து. அதிலும் அனார் நம் முன் கொண்டு வரும் உலகம் மிகவும் ரசிக்க வேண்டியது.
அனாரின் கவிதைகள் அவரே சொல்வது போல் 'மௌனத்திற்கும் உரையாடலுக்கும்' நடுவே உள்ள வெளியில் இருப்பவை. பெரும்பாலும் காதல் கவிதைகள். Impressionism போன்று மனதில் காதலின் நிலையை வார்த்தைகளில் வடிப்பவை. வான் கோவின் சித்திரங்கள் போல இவை எழுத்தில் வரையப்பட்டவை.
காதல் கவிதைகளில் அனார் ஒரு தனித்துவமிக்க கவிஞராகவே இருக்கிறார். அவர் வரையும் காதல் கோடுகள் இதுவரை இடப்படாதவை. 'ஒற்றை முத்தம்' ஒரு எடுத்துக்காட்டு.
'மரத்தின் இடைவெளிக்கூடாக விழுந்த
இறந்தகால வெட்கங்களின்
வெளிச்சத் தீற்றல்களைத்
திரும்ப நினைத்து நாணமுறுகிறேன்
..
கற்களின் இடுக்குகளுக்குள்ளே
தாப திவலைகளின்
நீர் வளையங்களாகிறேன்.
உன் கண்கள் ரகசியங்களுடன்
சுழலும் பொழுதெல்லாம்
இரவின் சதுப்பு நாணல்களுக்குள்
புதைகின்றன நட்சத்திரங்கள்.'
அனார் உருவாக்கும் காட்சி படிமங்கள் இதுவரை இல்லாதவை. அவரின் கவிதைகளின் உலகம் இத்தகைய மாய தோற்றங்களில் உருவாகும் படிமங்களின் வழியே வெளிப்படுகிறது.
பெரும்பாலும் காதலின் மெல்லிய வெளிப்பாடாகவே அவரது கவிதைகள் இருக்கின்றன. துயரங்கள் ஒரு நீர் கோடாக வழிந்தாலும், காதல் மனதின் வெளிப்பாடாகவே அவர் எழுதுகிறார்.
'பல்லாயிரம் உப்புக்கோடுகளாக
மழைக்கொட்டும் தனித்த இரவொன்றில்
கண்களில் இருந்து பெருகும்
உப்புக்கோடுகளை
வெளிப்படாமல் அழிக்கிறாள்..'
போன்ற வரிகள் வேறு சிலவே. அனாரின் மாய உலகம் வசீகரமானது. நம்மை ஈர்த்து அதனுள்ளேயே வைத்துக் கொள்வது. இதுவே அவரின் கவிதையின் வெற்றி எனலாம்.
'மௌனத்திற்கும் உரையாடலுக்குமிடையே
பெறப்படாத முத்தங்கள்
நம் கண்கள்'
----------------------------------------------------------------------
நன்றி : https://sibipranav.blogspot.com/2018/01/by.html?spref=fb
No comments:
Post a Comment