எழுதிச் செல்லும் கரங்கள் : அத்யந்தத்தின் ஞாபகங்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------------
அனார்
நான் வாசித்த கவிஞர்களில் எனக்குப்
பிடித்தமானவர்களின் பட்டியலில் எப்போதும் இடம்பெறுகிற ஒருவர். இவரது சமீபத்தியக்
கவிதைகள் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ‘ஜின்னின்
இரு தோகை’ என்ற தலைப்பில்
வந்திருக்கிறது. எண்ணிக்கையில் குறைவான கவிதைகளே கொண்டிருந்தாலும்
கவிதைகளின் வீர்யத்தாலும் அவை அழைத்துச் சென்று
ஆட்படுத்துகிற அனுபவவெளியின் ஒளிர்விலகல்களாலும் முக்கியமான தொகுதியாகிறது. அனாரின் பலம் சொல்ல
வருவதை மிக உறுதியாக சொல்ல
முனைகிறார். மேலும் அனாரின் கவிதைப்
பொருட்கள் அலாதியானவையாக இருக்கின்றன. இயல்பின் சொல் மலர்களை எடுப்பதிலும்
கோர்ப்பதிலும் அனாயாசம் காட்டுகிற அனார் அவற்றின் மீது
பரபரப்பேதுமின்றிக் கவிதை செய்வதையே விரும்புகிறார்.
இன்னும் சொல்வதானால் ஒருவகையில் தன் சொந்த மொழியின்
அருகாமையும் ஆன்ம உறவாடலும் கைவரப்
பெற்ற அனார் அனிச்சையாகவே தன்
கவிதை நிகழ்ந்து நிறைவதை எப்போதும் உறுதி
செய்கிறார். ஒரு சொல்லை அதன்
பகுதியைக் கூடத் தீர்மானிப்பதோ நிர்ப்பந்திப்பதோ
இல்லாமல் மிக எளிமையான அதே
நேரத்தில் தன்னியல்பின் பெருக்கத்தில் வந்து நிறைகின்றன அனாரின்
கவிதைகள். மேலோட்டம் என்று கடக்கவே முடியாத
ஆழ்கவனப் பார்வையை ஒவ்வொரு கவிதையிலும் அழுத்தமாய்
எதிர் நோக்குகின்றன இக்கவிதைகள். மாற்றாக முடிந்து வெளியேறும்
போழ்துகளில் சன்னவொலித்தலில் விருப்பப் பாடலின் வார்த்தைகளை மாற்றியும்
தத்தகாரம் கொண்டு நிரப்பியும் தனிமையும்
தானுமாய் விளையாடிப் பார்க்கிற அத்யந்தத்தின் ஞாபகங்களாக இக்கவிதைகள் வாசகனுக்குள் நிரம்புகின்றன.
இந்தத்
தொகுதியில் அனார் எழுதி இருக்கிற
‘கால்களால் ருசியறியும் நடனம்’ என்ற கவிதை
என் கண்டறிதலில் சமீபத்தில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த கவிதைகளில் முக்கியமான ஒன்று. இதன் ஆங்கில
மொழிபெயர்ப்பை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
இப்போது தமிழில் அனார் எழுதிய
கவிதை.
கால்களால் ருசியறியும் நடனம்
------------------------------------------------------------
அந்திப்பூச்சியின்
மந்திரம்
பலிக்கத்
தொடங்குகையில்
கோடை நடனம்
செக்கச் செவேலென
கரைந்துருகுகின்றது
உருவம்
பொன்னொளி
உருக்கென வியாபிக்க
வெள்ளை ஆடை
அகன்று குடைவிரிய
உயிர் எனும்
வெள்ளிப்பூச்சியே
ஜோதியை மொய்த்திடு
உருக்கொண்டு
முற்றி வெடிக்கின்ற
நிறச் சுளைகளின்
மீது
கால்களால்
ருசியறியும் நடனம் சுழலட்டும்
ஆவி கவ்விடும்
பார்வையில்
நிசப்தவெளி விரிய
மஞ்சள்
புல்வெளியாளின்
சிறகுகள்
படபடக்கின்றன
களிநடனமிடும்
நர்த்தகியின்
தெய்வீகப்
பனிமுத்துக்கள் உறிஞ்சி
மஞ்சள் சிறகன்
உணர்வின் ஆழத்திற்கு
நித்தியத்தின்
கிருபையை கொண்டு செல்கிறான்
--
இதன்
தலைப்பில் தொடங்குகிற தனித்துவத்தின் வசீகரம் ஒரு பெருமலைப்
பாதையின் மழைச்சாரல் பொழிவின் பொழுது நிகழ்கிற கண்ணறியா
நகர்தலின் போது ஒவ்வொரு வளைவிலும்
உயிர் போய் உயிர் வருகிற
நிச்சயமின்மையின் பொழுதான மிதமான அலறலுடன்
நிகழ்கிற பெயரற்ற மகிழ்வொன்றிற்குச் சற்றும்
குறைவற்றது. இந்தக் கவிதையின் சொற்களை
அவற்றின் வழமையிலிருந்து பெற்றுக் கொள்கிற மன அருகாமை
ஒன்று நிகழ்வதன் வாயிலாகவே இக்கவிதையின் முழுமை வரைக்கும் பிரயாணிக்க
முடியும். இதன் உருவகங்கள் பன்முக
சாத்திய வெளிகளில் நம்மைத் தள்ளுகின்றன. ஒவ்வொரு
சொல்லும் பேயுருக் கொள்வது மொழியின் நன்கு
ஒத்திகை செய்த பிற்பாடு நிகழ்த்தப் படுகிற நடனம் போன்ற
லாவகம்.
முற்றி
வெடிக்கின்ற நிறச்சுளைகளின் மீது கால்களால் ருசியறியும் நடனம் சுழலட்டும் என்பது
அபாரமாய் வெடிப்புறுகிறது. மஞ்சள் புல்வெளியாளும் மஞ்சள்
சிறகனும் நம்முள் நாளும் நிதானத்தில்
பெருக்கெடுக்கிற மஞ்சளின் அத்தனை நிகழ்தகவுகளையும் அறுத்தெறிந்து
வேறொரு ஒற்றையாகத் தன்னை நேர்த்துகிறது. நித்தியத்தின்
கிருபை உணரப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.
உயிர் எனும் வெள்ளிப்பூச்சியை எங்கனம்
எப்படி ஜோதியோடு சேர்ப்பிப்பது என்பது தான் சூட்சுமத்தின்
முன் கோரல் ஞானம் என்பதாகிறது.
சொற்களுக்கு
ஒப்புக் கொடுப்பதென்பது இப்படித் தான் சுயம் அழித்துக்
கரைத்து விடுவதற்கான நிகழ்சாத்தியம் என்பது. இன்னொரு சொல்லாய்ச்
சொல்வதானால் சுயம் அழிதலின் பெயர்
தான் மாயமாதல் என்பது. இக்கவிதை மொழிவழி
மாயமாதலை சாத்தியமாக்குகிறது.
--------------------------------------------------------------------------------------------
நன்றி : http://aathmaarthi.com/index.php?option=com_content&view=article&id=312&Itemid=322
No comments:
Post a Comment